நான் ஊழல் மோசடி காரர்களுக்கு எதிரானவன். அதனால் இந்த பாராளுமன்றத்தில் எனக்கு எதிர்பார்க்கும் பெறுபேறு கிடைக்கும் என எதிர்பார்க்க மாட்டேன்.
நாட்டு மக்களின் எதிர்பார்பை அடிப்படையாக்கொண்டே நான் போட்டியிடுகின்றேன். மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற நினைப்பவர்கள் எனக்கு வாக்களிக்கவேண்டும்.
அத்துடன் நான் ஜனாதிபதியாக தெரிவானால் ஊழல் மோசடி காரர்களுக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்துவேன் என ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்ற வளாகத்தில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தெரிவில் மாற்று யோசனை ஒன்றை நாங்கள் முன்வைத்திருந்தோம். அது தோல்வியடைந்தது. அதனால்தான் நாங்கள் போட்டியிட தீர்மானித்தோம். இந்த பாராளுமன்றத்தின் மூலம் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் இருக்கின்றன.
அதனை அடிப்படையாகக்கொண்டே போட்டியிடுகின்றோம். நாங்கள் அதிகாரத்துக்கு வந்தால் இடைக்கால அரசாங்கம் அமைப்பதே எமது நோக்கம்.. அந்த அரசாங்கத்தில் கடந்த காலத்தில் ஊழல், மோசகளுடன் தொடர்புபட்ட பல வழக்குகள் சட்டமா அதிபர் திணைக்களமும் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவும் வாபஸ் பெற்றுக்கொண்டிருந்தன.
அந்த வழக்குகளை நான் மீண்டும் விசாரணைக்கு எடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்ற உறுதிமொழியை வழங்குகிறேன்.
அதேபோன்று கடந்த காலங்களில் ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்குகளுக்கு வழங்கப்பட்டிருந்த தீர்ப்புகள் தொடர்பாக மக்கள் மத்தியல் பாரிய குழப்பம் இருக்கின்றன. அவ்வாறான வழக்குகளை மீண்டும் மேன்முறையீடு செய்வேன். அத்துடன் ஊழல் மோசடி தொடர்பாக பல்வேறு நபர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
அந்த விசாரணைகள் அனைத்தும் தற்போது குப்பை தொட்டியில் போடப்பட்டிருக்கின்றன. அந்த முறைப்பாடுகள் அனைத்தையும் விசாரணைக்காக துரிதப்படுத்துவோம். அதேபோன்று ஊழல் மோசடிகள் தொடர்பாக எம்மிடமிருக்கும் முறைப்பாடுகள் அனைத்தையும் இலங்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு வழங்கி விசாரணை மேற்கொள்வோம்.
இதனை நாங்கள் தெரிவித்தால். எமக்கு யாரும் வாக்களிக்கமாட்டார்கள். ஏனெனில் ஊழல் மோசடிகள் நிறைந்த வாக்கு மைதானமே தற்போது இருக்கின்றது. அதனால் இந்த வாக்கு மைதானத்தில் இருப்பவர்கள், தங்களை பாதுகாக்கக்கூடிய வேட்பாளரையே ஆதரிப்பார்கள்.
நான் ஊழல் மோசடி காரர்களுக்கு எதிரானவன். அதனால் இந்த பாராளுமன்றத்தில் எனக்கு எதிர்பார்க்கும் பெறுபேறு கிடைக்கும் என எதிர்பார்க்க மாட்டேன். நாட்டு மக்களின் எதிர்பார்பை அடிப்படையாக்கொண்டே நான் போட்டியிடுகின்றேன். மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற நினைப்பவர்கள் எனக்கு வாக்களிக்கவேண்டும். அத்துடன் நான் போட்டியிடுவதில் இருந்து வாபஸ் பெறப்போவதும் இல்லை என்றார்.