ஜனநாயகக் கட்சி சார்பில் தேர்தல் களத்தில் குதித்த ஒபாமா
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக ஜனநாயகக் கட்சி சார்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பிரசார நடவடிக்கைகளில் குதித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலரி கிளிண்டன், அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதல் நினைவுதின நிகழ்வில் பங்கேற்றதன் பின்னர் நிமோனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டார். எனினும், அவரது உடல்நிலை தற்போது தேறிவருவதாகக் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றிய ஒபாமா, எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஹிலரி கிளிண்டனை அமெரிக்காவின் ஜனாதிபதியாக்குவதற்கு கடுமையாக போராடவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், நாட்டின் தலைமைத்துவம் நிலையான மற்றும் உண்மையான ஒருவரிடம் கையளிக்கப்பட வேண்டும். அதன்படி ஹிலரி ஒருவரே நிலையானவர் என்பதுடன் அவரே நீதிக்காக போராடுபவராக திகழ்கிறார் என்றும் குறிப்பிட்டார்.