இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி டக்வெல்த் லூயிஸ் முறையில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சொந்த மண்ணில் 9 ஆண்டுகளின் பின் இந்திய அணியை தோற்கடித்தது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.
இந்நிலையில் முன்னதாக இடம்பெற்ற 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியிருந்த நிலையில், நேற்று இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 23 ஓவர்கள் நிறைவில் 147 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தின பின் போட்டி ஆரம்பமானது. இதனால் போட்டி 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு மீள ஆரம்பிக்கப்பட்டது.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 43.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பிரித்வி ஷா 49 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் பிரவீன் ஜயவிக்ரம மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்நிலையில் இலங்கை அணிக்கு டக்வெர்த் லூயிஸ் முறையில் 47 ஓவர்களில் 227 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 39 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அவிஷ்க பெர்னாண்டோ 76 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் ராகுல் சஹர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது.
தோல்விகளால் துவண்டிருந்த இலங்கை அணிக்கு இந்த வெற்றி பெரும் ஆறுதல் வெற்றி என்பதுடன் இலங்கை ரசிகர்களின் மனங்களையும் ஆறுதல் படுத்தியுள்ளதுடன் இலங்கை அணி தனது சொந்த மண்ணில் வைத்து கடந்த 9 ஆண்டுகளின் பின் இந்திய அணியை தோற்கடிகத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.