ஆப்கானிஸ்தான் தலைநகர், காபூலில், சொகுசு ஓட்டலில் ஆயுதங்களுடன் புகுந்த பயங்கரவாதிகள், கண்மூடித்தனமாக சுட்டதில், வெளிநாட்டவர், 14 பேர் உட்பட, 18 பேர் உயிரிழந்தனர். ஓட்டலில் இருந்த, 150 பேர், பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஆசிய நாடான,ஆப்கானிஸ்தான் தலைநகர், காபூலில் உள்ள, இன்டர்கான்டினென்டல் ஓட்டலில், நேற்று முன்தினம் இரவு, ஆயுதங்களுடன் அதிரடியாக நுழைந்த பயங்கரவாதிகள், கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.இதில், 18 பேர்இறந்தனர்; இவர்களில், 14 பேர், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். இதைத் தொடர்ந்து, பயங்கரவாதிகள் – பாதுகாப்பு படை வீரர்கள் இடையே, 12 மணி நேரம் கடும் சண்டை நடந்தது.இதில், நான்கு பயங்கரவாதிகளை, பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.பின், ஓட்டலில் பல அறைகளில், உயிர் தப்பிக்க பதுங்கி இருந்த, 150 பேர் பாதுகாப்புடன் மீட்கப்பட்டனர். அவர்களில், 40 பேர், வெளிநாடுகளை சேர்ந்தோர்.
பயங்கரவாதிகளின் தாக்குதலில், ஓட்டலின் ஆறாவது மாடியில் தீப்பற்றியதில், அந்த கட்டடத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு, இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இதே ஓட்டல் மீது, 2011ல், தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, ஆப்கனின், ஹெராத் மாகாணத்தில், சாலையோரத்தில் கிடந்த குண்டு வெடித்ததில், அப்பாவி பொதுமக்கள், 12 பேர் உயிரிழந்தனர்.