சங்குக்கு ஆகாயத்தில் உள்ள வேத மந்திரங்களை ஈர்க்கும் சக்தி உண்டு. சங்கில் உள்ள ஜலதாளயோக ஜோதி சக்தியானது நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுத் தரும் ஆற்றல் கொண்டது.
தேவர்களும், அசுரர்களும் ஒன்றிணைந்து பாற்கடலை கடந்த போது லட்சுமியுடன் சங்கும் சேர்ந்து வெளியில் வந்தது. இந்த உலகுக்கு சங்கு அறிமுகமானது இப்படித்தான்.
லட்சுமியின் அழகில் மயங்கி அவளை திருமணம் செய்து கொண்ட மகா விஷ்ணு, சங்குவை இடது கையில் ஏந்தி ‘சங்கு சக்கர தாரி’யாக மாறினார். அன்று முதல் விஷ்ணுவின் படைகளில் ‘சங்குப் படை’ முக்கியமானதாக மாறியது என்று விஷ்ணு புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மகாவிஷ்ணு, லட்சுமி இருவரிடமும் சங்கு நிலை பெற்றுள்ளதால், அது செல்வம், வெற்றி உள்பட அனைத்தையும் தரும் என்று புராணங்கள் சொல்கின்றன.
லட்சுமியின் அம்சமாகக் கருதப்படும் சங்கு, ஓம் எனும் பிரணவ மந்திர வடிவில் அமைந்துள்ளது. சங்கில் இருந்தும் ஓம் எனும் ஒலி எழும். இந்த ஓலி துர்சக்திகளை விரட்டும் ஆற்றல் கொண்டது. எனவேதான் வீட்டில் சங்கு வைத்து வழிபடுவது நல்லது என்று கூறப்படுகிறது. சங்கில் நீர் விட்டு கும்பத்தின் மேல் வைத்து, பூக்கள் போட்டு, பூஜை செய்து ஆராதனை நடத்தி, சங்கில் உள்ள நீரை சாமி சிலைகள் மீது அபி ஷேகம் செய்தால் அது தீர்த்தமாக மாறி விடும் என்கிறார்கள்.
இப்படி சாதாரண நீரை, சக்தி வாய்ந்த மகா தீர்த்தமாக மாற்றிவிடும் சக்தி படைத்த சங்கின் முன்பாகத்தில் கங்கை, மத்தியில் வருணன், பின்பாகத்தில் பிரஜாபதி வசிக்கிறார்களாம். இவர்கள் தவிர சங்கில் குபேரன் உள்பட எல்லா தேவதைகளும் வசிப்பதாக சொல்கிறார்கள். இதனால்தான் சைவ, வைணவ ஆலய வழிபாடுகளில் சங்கு பிரதான இடம் வகிக்கிறது.
சங்கின் பிறப்புக்கு தேவி மகாத்மியத்தில் ஒரு கதை கூறப்பட்டுள்ளது……
கிருஷ்ணரின் மகனாக சுதர்மன் என்பவன் அவதரித்தான். ராதையின் சாபம் காரணமாக இவன் அசுரகுலத்தில் சங்கசூடன் என்ற பெயரில் பிறக்க நேரிட்டது.
சங்கசூடன் தான் பெற்ற வரத்தால் தேவர்களை கொடுமைப்படுத்தினான். இதனால் சிவபெருமான் அவனை சூலத்தால் அழித்து சாம்பலாக்கினார். அவனது எலும்புகள் தான் ஆழ்கடலில் விழுந்து சங்குகளாக மாறியதாக சொல்கிறார்கள்.
சங்கில் 16 வகை சங்குகள் இருந்தாலும் இடம்புரி சங்கு, வலம்புரி சங்கு, திருகு சங்கு ஆகிய 3 வகை சங்குகள் முக்கியமானவை. இதில் இடம் புரி சங்குகள் அதிகமாக கிடைக்கும். லட்சத்தில் ஒரு சங்குதான் வலம்புரி சங்காக இருக்கும். ஆலயங்களில் சாதாரணமாக செய்யப்படும் சங்கு, சப்தாகர்ஷண சக்தி பூஜைகளில் இடம்புரி சங்கையே பயன்படுத்துவார்கள். திருகு சங்குகள் திருஷ்டி போக்கவும், வாஸ்து குறைபாடுகளை நீக்கவும் பயன்படும்.
வலம்புரி சங்கு புனிதமும் ஆற்றலும் நிறைந் தது. இடது கையால் பிடிக்க தகுந்த அமைப்புடன் இருப்பது வலம்புரி சங்காகும். ஆழ்வார்களில் முதல் ஆழ்வாரான பொய்கை ஆழ்வார் சங்கின் அம்சமாக அவதரித்தவர் ஆவார். தோஷங்களில் மிக உயர்ந்த தோஷமான பிரம்மஹத்தி தோஷத்தை விரட்டும் ஆற்றல் வலம்புரி சங்குக்கு உண்டு.
வீட்டில் வலம்புரி சங்கு வைத்து வழிபட்டு வந்தால் மற்றவர்களுக்கு உதவும் அளவுக்கு நம் பொருளாதார நிலை உயரும்.செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் வலம்புரி சங்கில் பால் வைத்து 27 செவ்வாய்க் கிழமை அம்மனை வழிபட்டு வந்தால் எல்லா தோஷங்களும் நீங்கி விடும். சங்குக்கு வெள்ளிக்கிழமை தோறும் பூஜை செய்து சங்கு காயத்ரியை 108 முறை ஜெபித்தால் வற்றாத வளம் வந்து சேரும்.
பெருமாளுக்கு பால், தேன், இளநீர், சந்தனம் உள்பட 12 வகை பொருட்களை 1008 சங்காபிஷேகமாக செய்தால் நல்ல குணம் உண்டாகும். சங்கு தெய்வீகப் பொருளாகக் கருதப்படுவதால் அதற்கு ‘புனிதமான பாத்திரம்’ என்றும் ஒரு பெயர் உண்டு. எனவே தான் அதில் ஊற்றப்படும் நீர் புனிதமானதாக மாறுகிறது. அந்த தீர்த்தத்தை குடித்தால் ஆயுள் பெருகும்.
சங்கு தீர்த்தம் போலவே சங்கு ஒலியும் மகிமை நிறைந்தது. சங்சொலி கேட்டதும் தீய சக்திகள் ஓடி விடும். எனவே தான் பூஜை தொடங்கும் முன்பு சங்சொலி எழுப்புவது இன்னமும் நடைமுறையில் உள்ளது. சோமவார சங்காபிஷேகத்தை நம்மால் நடத்த இயலாவிட்டாலும் பரவாயில்லை. அந்த அபிஷேகத்தை கண் குளிர தரிசனம் செய்தாலே சங்கடங்கள் நீங்கி விடும் என்பது ஐதீகம்.
சங்காபிஷேகத்தில் தீர்த்தம் தவிர மூலிகைகள், பச்சிலைகள், வாசனைத் திரவியங்கள் கலந்தும் பயன்படுத்தலாம். இத்தகைய சங்கு அபிஷேகங்களை கண்டால் 7 பிறவி பாவங்கள் விலகுமாம். அதோடு இழந்த பொருள், பதவி கிடைக்கும். இம்மை – மறுமை வினைகள் தீரும். சங்காபிஷேக தீர்த்தத்தை அருந்தியவர்களுக்கு அகாலமரணம் என்பது வராது. உடலில் தோன்றும் 4446 வகை நோய்கள் நீங்கும்.
சங்கு நிலையான தன்மை கொண்டது. சுட்டாலும் அது வெண்மையேத்தரும். பஞ்சபூதங்களால் சங்கை எந்த மாற்றமும் செய்ய இயலாது. அது போல மனிதனும் மாறாத இயல்புடன் இறைவனை பூஜிக்க வேண்டும் என்பதை உணர்த்தவே இறைவழிபாட்டில் நம் முன்னோர்கள் சங்கை சேர்த்துள்ளனர். சங்காபிஷேகம் நடத்துபவர்களுக்கு தெளிவான மனநிலை உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். குறிப்பாக கணவன் – மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
சங்குக்கு ஆகாயத்தில் உள்ள வேத மந்திரங்களை ஈர்க்கும் சக்தி உண்டு. சங்கில் உள்ள ஜலதாளயோக ஜோதி சக்தியானது நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுத் தரும் ஆற்றல் கொண்டது.
சங்கை அருகில் வைத்து எந்த கடவுளை வேண்டினாலும், அந்த இறைவனின் சக்தி நமக்கு முழுமையாக கிடைக்கும். எனவே ஆலயத்தில் நடக்கும் சங்காபிஷேங்களில் கலந்து கொள்வது உங்களை மேன்மைப்படுத்தும் என்பதை மறந்து விடாதீர்கள்.
வீட்டிலும் சங்கு வழிபாட்டை உரிய முறையில் செய்தால், இந்த பிறவியில் எல்லா இன்பத்தையும் பெற முடியும்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]