சைட்டம் எனப்படும் மாலபே தனியார் கல்லூரியை ரத்து செய்து, அதனை அரச அங்கீகாரம் பெற்ற நிறுவனமொன்றின் கீழ் இலாபமீட்டாத நிறுவனமாக நடத்திச் செல்லும் உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது.
ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக இலங்கை தகவல் தொழிநுட்ப நிறுவனத்துடன் (SLIIT) இந்த ஒப்பந்தம் கடந்த 30ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன் பிரகாரம் சைட்டம் நிறுவனத்தை ரத்து செய்வதாக குறிப்பிட்டுள்ள அரசாங்க தகவல் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதி கிடைக்கப்பெற்றதன் பின்னர் குறித்த ஒப்பந்தம் சட்டபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வந்த சர்ச்சையை தீர்ப்பதில் அரசாங்கம் பாரிய நெருக்கடியை சந்தித்திருந்தது. நாள்தோறும் போராட்டங்கள் வலுத்ததோடு, இலங்கை மருத்துவ சபையும் இவ் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாகவே செயற்பட்டது. இந்நிலையில், அண்மையில் இலங்கை மருத்துவ சபைக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டதன் பின்னர், சைட்டம் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வந்த நிலையில் அதனை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவதற்கு கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
புதிய நிறுவனத்தின் எந்தவொரு சொத்துக்களிலோ பொறுப்புக்களிலோ சைட்டம் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்கள் தொடர்புபட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.