சைட்டம் விவகாரத்தில் பெயர் மாற்று வித்தையை அரசு காட்டியுள்ளது. மாறாகத் தீர்வை முன்வைக்கவில்லை. நயவஞ்சகச் செயற்பாடுகளை விடுத்து சைட்டத்தை மூடுவதற்குரிய திட்டத்தை அரசு முன்வைக்கவேண் டும். இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.
சர்ச்சைக்குரிய சைட்டம் பிரச்சினைக்கு அரசால் முன்மொழியப்பட்டுள்ள தீர்வு தொடர்பில் தமது கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை மூடிவிட்டு நிரந்தரத் தீர்வொன்றை அரசு பெற்றுக்கொடுக்கவுள்ளது என்று அரச தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சைட்டத்தை நீக்கம் செய்வதற்கு இடமளிக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டிலேயே சில அமைச்சர்கள் இருந்தனர். ஆனால், அந்த நிலைப்பாட்டில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சைட்டம் இல்லாதொழிக்கப்படும் என்பதை அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது. போராட்டக்காரர்களுக்குக் கிடைத்த வெற்றியாகவே இதைப் பார்க்கவேண்டும்.
எனினும், அரசால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வில் பெயர்மாற்று வித்தையே காண்பிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களின் கோரிக்கைக்கமைய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை.
பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றி அதனை அரசின் கீழ் இயங்கச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், பட்டப்படிப்பை விற்பனை செய்யும் செயற்பாடு இல்லாமல் செய்யப்படவில்லை. அது முன்பு உள்ளவாறே தொடரப்படுகின்றது.
இந்த நயவஞ்சகச் செயற்பாட்டை மூடிமறைப்பதற்கான சைட்டம் நிறுவனத்தின் பெயர் உரிமத்தை மாற்றி வறுமையான மாணவர்கள் சிலருக்குப் புலைமைப்பரிசில்களை யும் பெற்றுத்தருவதாகக் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் சைட்டம் விவகாரத்தில் அரசு சைட்டத்துக்குப் பூட்டு என்று கூறியுள்ளதே அந்த போராட்டத்தின் முன்னேற்றம் என்றுதான் கூறவேண்டும்.
அதனால் பல்கலைக்கழகப் பேராசிரியர்களால் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்வை மையப்படுத்திச் சைட்டத்தை இல்லாமல் செய்து அதற்கான மாற்று ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்துகின்றோம் – – என்றுள்ளது.