நாடாளுமன்றத்திற்குள் சைக்கிளில் வருவதற்கு கூட அனுமதிக்கின்றார்கள் இல்லை. நிலைமை மோசமடைந்து விட்டது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வருகை தந்தமை தொடர்பில் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் பொதுமக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் வகையில் சைக்கிளில் நாடாளுமன்றதிற்கு வருகை தந்தோம். அதற்குக் கூட அனுமதிக்கின்றார்கள் இல்லை. நிலைமைகள் மிகவும் மோசமடைந்து விட்டன என்றார்.
இதேவேளை நாமல் ராஜபக்க்ஷ எம்.பி. தெரிவிக்கையில், அமைச்சர் அர்ஜுன ரணதுங்க துறைமுக அமைச்சராக இருந்த போது துறைமுகங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு வெளியிட்டார். அதனால் அந்த அமைச்சிலிருந்து அவரை மாற்றம் செய்தார்கள்.
தற்போது தரம் குறைந்த பெற்றோலை இறக்குமதி செய்வதற்கு எதிர்ப்பு வெளியிட்டார். இதனால் பெற்றோல் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அவருக்கு நெருக்கடி அளிக்கின்றார்கள்.
பொதுமக்கள் பெற்றோல் இன்றி நெருக்கடிக்குள் உள்ளாகியுள்ளனர். அவர்களின் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கு திராணியற்ற நிலையில் பெற்றோல் தாங்கிய கப்பல் வருகின்றமையை மணித்தியாலத்துக்கு ஒரு தடவை செய்தியாக வெளியிடுகின்ற நிலைமைக்கு அரசாங்கம் தரம் குறைந்து சென்றுள்ளது என்றார்.