காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை ‘விஷப்பாம்பு’ என விமர்சித்ததைத் தொடர்ந்து, கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவர் சோனியா காந்தியை ‘விஷப் பெண்’என்றும், பாகிஸ்தான், சீன உளவாளி என்றும் விமர்ச்சித்துள்ளார்.
கர்நாடகாவில் அடுத்த மாதம் 10-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், அங்கு பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது. கட்சிகளுக்கு இடையேயான வார்த்தைப் போர்களும் வலுத்துவருகின்றன.
முன்னதாக வியாழக்கிழமை) கர்நாடகா மாநிலம் கடக் மாவட்டத்தில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,” எப்போதும் தவறு செய்யாதீர்கள். மோடி ஒரு விஷப் பாம்பைப் போன்றவர். அவர் விஷம் இல்லை என்று நீங்கள் சொன்னால் சுவைத்துப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அப்படிச் செய்யாதீர்கள். மீறி செய்தால், உங்கள் உயிர் போய்விடும்” என்று தெரிவித்திருந்தார்.
பின்னர், தான் எந்த தனிமனிதரையும் தாக்கிப்பேசவில்லை எனவும் தனது பேச்சு பாஜகவைப் பற்றியதே என்று விளக்கம் அளித்திருந்தார்.
உளவாளி சோனியா காந்தி: இந்த நிலையில் கார்கேவின் இந்தப் பேச்சிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கர்நாடாகாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யத்னால் சோனியா காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார். விஜயபுரா தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கும் யத்னால், அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளராகவும் உள்ளார்.
கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் உள்ள யெல்புர்கா பகுதியில் நடந்த பேரணி பொதுக்கூட்டத்தில் பேசிய யத்னால்,.
நீங்களெல்லாம் பெரிதும் நம்பியிருந்த சோனியா காந்தி ஒரு விஷப்பெண்ணா? சோனியா காந்தி நாட்டை அழித்து, பாகிஸ்தான் மற்றும் சீனாவின் உளவாளியாக வேலை பார்த்தார். மோடியின் அரசை கவிழ்க்க மணி சங்கர அய்யர் பாகிஸ்தான், சீனாவிடம் உதவி கோரினார்.
டீ விற்றவர் பிரதமராக ஆகியிருக்கிறார் என்று பிரதமர் மோடியை அவர்கள் கேலி செய்தார்கள். அதன் விளைவாக மக்களவையில் எதிர்க்கட்சி இடத்தைக் கூட பெறமுடியாத அளவுக்கு காங்கிரஸ் மொத்தமாக துடைத்தெறியப்பட்டது. பிரதமர் மோடியை குறித்து கார்கே பேசியதை பாஜகவைச் சேர்ந்தவர்கள் எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்” என்று பேசினார்.
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் தங்களின் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தனது ட்விட்டர் பதிவில்,”ஒவ்வொரு தேர்தலின் போதும், அவர்கள் சோனியா காந்தி குறித்து புதிய அவதூறு பரப்பி அவரை அவமதிக்கின்றனர். தனது வாழ்நாள் முழுமையும் கண்ணியத்துடனும் கருணையுடனும் அவர் வாழ்ந்து வருகிறார். எங்கள் தலைவருக்கு எதிராக பாஜக அவமானகரமான மொழிகளில் பேசி தன்னைத் தாழ்த்திக் கொள்கிறது. மோடி ஜி நீங்கள் இந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.