இசையமைப்பாளர் சித்து குமாரின் இனிமையான கிராமிய இசையில் உருவாகி, இயக்குநரும், நடிகருமான சேரன் நடிப்பில் தயாரான ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தின் ஓடியோ வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
ஸ்ரீவாரி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. ரங்கநாதன் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த படத்தில் ‘யதார்த்த நாயகன்’ சேரன், ‘இளைய நவரச நாயகன்’ கௌதம் கார்த்திக், சரவணன், தம்பிராமையா, விக்னேஷ், சிவாத்மிகா ராஜசேகர், வெண்பா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார்கள். பால பரணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சித்து குமார் இசை அமைத்திருக்கிறார்.
இப்படத்தின் ஓடியோ வெளியீட்டு விழாவில் பங்குபற்றி, படக்குழுவினரை வாழ்த்தி இயக்குநர் லிங்குசாமி பேசுகையில், ” நான் இயக்கிய முதல் படத்தின் டைட்டில் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்று தான் வைத்திருந்தேன். அப்போது சிலர் இந்த டைட்டில் ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதனால் வேறு ஏதேனும் தலைப்பை வைக்கலாம் என ஆலோசனை கூறினர். இதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக நான் தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்று விசாரித்தபோது, இந்த தலைப்பை இயக்குநர் சேரன் பதிவு செய்து வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. ‘தேசிய கீதம்’ படத்தின் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இயக்குநர் சேரனை நேரில் சந்தித்து, ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ பட தலைப்பு குறித்து பேசினேன். அப்போது அவர், ‘இந்த தலைப்பு நான் நடிப்பதற்காக வைத்திருக்கிறேன்’ என்று உறுதிபட தெரிவித்து விட்டார்.
அதன் பிறகு என்னுடைய அலுவலகத்தில் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற எழுதியிருந்த தாளின் மீது ‘ஆனந்தம்’ என்ற சொல் மட்டும் தெரியும் வகையில் அதன் மீது கிளாப் போர்டு இருந்தது. உடனடியாக என் மனதில் ‘ஆர்.பி. சவுத்ரியின் ஆனந்தம்’ இதுதான் தலைப்பு என தீர்மானித்துக் கொண்டு, தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி அவர்களிடம் தெரிவித்தேன். அவரும் இதற்கு உடனடியாக ஒப்புதல் கொடுத்தார். இப்படித்தான் ஆனந்தம் படத்தின் தலைப்பு கிடைத்தது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தின் டைட்டிலை வைத்திருந்த சேரன், தற்போது அதே பெயரில் கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருப்பதை நான் இப்படத்தின் வெற்றியாக காண்கிறேன்.” என்றார்.
‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற படத்தின் டைட்டிலை 2000 ஆண்டில் பதிவு செய்த இயக்குநர் சேரன், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அதே டைட்டிலில் நடித்திருப்பதால் அவருடைய கனவு நனவாகி இருக்கிறது. இதன் காரணமாகவே இந்த திரைப்படம் பாரிய வெற்றியை பெறும் என்று திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]