விக்ரம், அக்ஷரா ஹாசன், அபு ஹாசன் நடித்துள்ள கடாரம் கொண்டான் படம் இன்று(ஜூலை 19) வெளியாகிறது. இந்தப்படம் தெலுங்கில் மிஸ்டர் கே.கே என்ற பெயரில் வெளிவருகிறது. இதையொட்டி ஐதராபாத்தில் நடந்த அறிமுக விழாவில் பேசிய விக்ரம். சேது படம் வெற்றி பெற்றிருக்காவிட்டால் சினிமாவில் இருந்தே விலகி இருப்பேன். வெற்றி பெற்றதால் ஓடிக் கொண்டு இருக்கிறேன் என்று உருக்கமாக பேசினார். அவர் பேசியதாவது:
எனது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாதவர் பாலா. சேது படத்தை கொடுத்து சிறந்த நடிகனாகவும், என் வாழ்க்கையும் மாற்றினர். எனது வாழ்க்கையை சேதுவுக்கு முன்னால் சேதுவுக்கு பின்னால் என்று பிரிக்கலாம். சேதுவுக்கு முன்பு எனது படங்கள் நன்றாக போகவில்லை. எனவே சேது தோற்றால் சினிமாவை விட்டு விலகிவிட முடிவு செய்து இருந்தேன். ஆனால் அந்த படம் கொடுத்த வெற்றியால் இன்னும் உற்சாகமாக சினிமாவை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறேன். பிதாமகன் மூலம் இன்னொரு வெற்றியையும், தேசிய விருதையும் கொடுத்தார் பாலா.
என்னை பார்த்து பாலாவே ஆச்சர்யப்படும்படி செய்தவர் இயக்குனர் ஷங்கர். அந்நியன் படத்தை பார்த்து விட்டு பாலா என்னை பார்த்து ஆச்சர்யப்பட்டார். ஐ படத்தில் நடித்ததை இப்போதும் நம்பவே முடியவில்லை. எப்படி என்னால் அப்படி நடிக்க முடிந்தது என்பது ஆச்சர்யமாகவே இருக்கிறது.
மணிரத்னம் எனது கனவு இயக்குனர். அவரின் ராவணன், என்னை பாலிவுட்டிற்கு அறிமுகப்படுத்தியது. விரைவில் அவரது டைரக்ஷனில் சரித்திர படமொன்றில் நடிக்கிறேன். அந்தபடம் தமிழ் சினிமாவின் மைல் கல்லாக இருக்கும். எனது கேரியரில் முக்கியமான படமாக இருக்கும்.
எனது கனவு நாயகன், மானசீக குரு கமல் தயாரிப்பில் கடாரம் கொண்டான் படத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது. கடாரம் கொண்டான் பாடல் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன், என்னை பாராட்டினார். அதை கேட்டு கண்கலங்கி விட்டேன். எனது ஒவ்வொரு படமும் ரசிகர்களிடம் சேர வேண்டும். நல்ல வசூல் பார்க்க வேண்டும் என்று உழைக்கிறேன்.
இவ்வாறு விக்ரம் கூறினார்.