சேதமடைந்த மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை வங்கிகள் மூலம் மாற்றிக்கொள்வதற்கான கால அவகாசம் அடுத்தமாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைவதாக இலங்கை மத்தியவங்கியின் நிதி திணைக்களத்தின் உயர் அதிகாரி தீபா செனவிரத்ன தெரிவித்தார்.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் நாணயத்தாள்கள் சுத்தமாக வைத்திருப்பது மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாகவும் நாணயத்தாள்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அதனை பயன்படுத்துவது நாட்டின் நற்பெயருக்கு மிகவும் முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகை தந்து தமது நாட்டு நாணயத்தாள்களுக்கு பதிலாக இலங்கை நாணயத்தாள்களை பெற்றுக்கொள்ளும் போது அதன் சுத்தத்தன்மை தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்துவதாக திருமதி செனவிரத்ன சுட்டிக்காட்டினார்.
நாணயத்தாள்களை சுத்தமாக வைத்திருப்பது தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் அறிவு மிகவும் குறைந்தமட்டத்திலேயே காணப்படுவதாகவும் நாணயத்தாள்கள் இவ்வாறு பாதிப்பிற்குள்ளாவதினால் குறித்த காலப்பகுதிக்கு முன்னதாக நாணயத்தாள்களை மத்திய வங்கி அச்சிடவேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாணயக்குற்றிகளை பயன்படுத்துவதன் தேவை குறித்து சுட்டிக்காட்டிய அவர் விகாரைகள் ஆலயங்கள் வீடுகளில் உண்டியல்களின் சேகரிக்கப்படும் நாணயக்குற்றிகளை மத்தியவங்கியினால் மீண்டும் தயாரிக்கவேண்டியுள்ளது.
நாணயக்குற்றியில் காணப்படும் பெறுமதியிலும் பார்க்க கூடுதலான தொகையை அவற்றை தயாரிப்பதற்காக செலவிடவேண்டியுள்ளது.இருப்பினும் நாணயக்குற்றிக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு இடமில்லை .போதுமான நாணயக்குற்றிகள் வர்த்தக வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.