இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் மனிதனை மிகவும் வசிகரப்படுத்தியது செல்போனாகத் தான் இருக்க முடியும். அதிலும் குறிப்பாக இன்றைய தலைமுறைகள் மிகவும் நேசிக்க கூடிய கையடக்க காதலியாகவும், காதலனாகவும் மாறிவிட்டது எனலாம்.
உலகத்தில் எந்த மூலையில் இருப்பவர்களிடமும் பேச கண்டுபிடிக்கப்பட்ட கருவி தான் செல்போன். முன்பு எல்லாம் நாம் ஒருவரிடம் பேச வேண்டும் என்றால் தொலைபேசி மூலம் தான் பேச முடியும். முகம் பார்த்து பேச முடிவதில்லை. குரல் ஒலி மட்டும் கேட்கும். ஆனால் இன்று செல்போன் மூலம் குறுஞ்செய்தி, கேமரா, வீடியோ, விளையாட்டுகள், முகம் பார்த்து பேசுதல் என இதன் செயல்பாட்டை பெருக்கி கொண்டே போகிறது தயாரிப்பு நிறுவனங்கள்.
முகம் சுளிக்க வைக்கும்
செல்போன், உலகத்தையே உள்ளங்கைக்குள் கொண்டு வந்ததை அற்புத படைப்பு எனலாம். தொலைபேசியை நாம் ஒரு இடத்தில் வைத்து தான் பயன்படுத்த முடியும். ஆனால் செல்போன் நாம் எங்கு சென்றாலும் நம்முடன் எடுத்து செல்ல முடியும். அதன் உருவ அளவு, எடை, அமைப்பு மிகவும் குறைவாகவும், அழகாகவும் அமைந்திருக்கும். இவ்வாறெல்லாம் பயன் உள்ளதாக இருக்கும் செல்போனை, நம் இளைய சமுதாயம் நல்வழிகளில் பயன்படுத்தாமல், தீய வழிகளில் பயன்படுத்த தொடங்கி விட்டார்கள்.
பொதுவாக இன்று இளைஞர்களும், இளம் பெண்களும் அதிகம் செல்போன் பயன்படுத்துகின்றனர். பொது இடங்களிலும், பஸ்களிலும் போட்டிபோட்டு சத்தமாக ஒலிக்க செய்யும் தரம் குறைந்த சினிமா பாடல்கள், மேலும் செல்போனில் தேவையற்ற மற்றும் ஆபாச பேச்சுகளை யாரிடமாவது பேசுவதை இளைஞர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இது அனைவரையும் முகம் சுளிக்க வைக்கும்.
உயிர்கொல்லி நோய்
இன்றைய இளம் தலைமுறைகளின் உடலில் ஓர் முக்கிய அங்கமாக மாறி விட்டது செல்போன். 80 சதவீத இன்றைய இளைய தலைமுறையினர் இரவு நேர நீண்ட பேச்சு, மறைந்து இருந்து பேசுவது, பாலியல் படங்களை வைத்திருப்பது போன்ற செயலில் ஈடுபடுகின்றனர். அணுகுண்டை நல்வழியில் பயன்படுத்தவே கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதனை தீய வழிகளுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். அதே போல் செல்போனும் தவறான வழிக்கு பயன்படுத்தப்படுகிறது. செல்போனில் தொடர்ந்து விளையாடுவதால் இளைஞர்களுக்கு பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன. கழுத்து வலி, மனநோய், முதுகுவலி, கண்பார்வை கோளாறு ஏற்படுகிறது. ஆகவே செல்போனை தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.