பொதுமக்கள் இதுபோன்று மோட்டார் சைக்கிள், அல்லது கார்களை இயக்கும்போது சீரியல், பாடல்களை காண்பது விபத்து ஏற்பட வழிவகுக்கும். எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்திய அளவில் தமிழகத்தில்தான் விபத்துகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதில் செல்போன் பேசியபடி வாகனங்கள் ஓட்டுபவர்களால் விபத்துகள் ஏற்பட அதிகவாய்ப்பு உள்ளது. இதனால் செல்போனில் பேசியபடி வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு ரூ.1,500 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் செல்போனில் பேசியபடி வாகனங்களை இயக்க வேண்டாம் என்று போக்குவரத்து துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளின் முன்புறம் இடது பக்க கண்ணாடி அருகே செல்போனை வைத்து கொண்டு, அதில் சீரியல் பார்த்தபடி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவ்வளவு ஆர்வமாக செல்போனில் சீரியல் பார்த்தபடி மோட்டார் சைக்கிளை ஓட்டிய அவரை, அந்த வழியாக வந்த மற்றொரு நபர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
இந்த வீடியோ பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்த நிலையில் அந்த வீடியோ வைரலானதால் அதில் பதிவாகி இருந்த மோட்டார் சைக்கிள் எண்ணை வைத்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர் கண்ணப்பன் நகரை சேர்ந்த முத்துசாமி (வயது 35) என்பதும், தனியார் மசாலா நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் தனது மோட்டார் சைக்கிளில் பிரத்தியேக செல்போன் ஸ்டாண்ட் அமைத்து அதில் செல்போனை வைத்துக் கொண்டு சீரியல் பார்த்துக் கொண்டே வாகனம் ஓட்டியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர் மீது வாகனத்தை இயக்கும் போது செல்போன் பயன்படுத்துதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் ரூ.1,200 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவருடைய வாகனத்தில் அமைக்கப்பட்டிருந்த செல்போன் ஸ்டாண்ட் அகற்றப்பட்டது.
இதுகுறித்து போலீசார் கூறும்போது:-
பொதுமக்கள் இதுபோன்று மோட்டார் சைக்கிள், அல்லது கார்களை இயக்கும்போது சீரியல், பாடல்களை காண்பது விபத்து ஏற்பட வழிவகுக்கும். வாகனத்தை ஓட்டுபவர்களின் கவனம் சிதறும் என்பதால் அவருக்கு மட்டுமல்ல, அந்த வழியாக வரும் பிற வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.