125 ஆவது பிரெஞ்ச் பகிரங்க போட்டியின் முதல் சுற்றில் வெற்றியீட்டி நட்சத்திர டென்னிஸ் வீராங்கனைகளான செரீனா வில்லியம்ஸ், கரோலியான பிலிஸ்கோவா, அஷ்லி பார்ட்டி ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
செக் குடியரசின் கரோலினா பிலிஸ்கோவாவுக்கும், குரேஷியாவின் டொன்னா வேகிக் ஆகியோருக்கிடையில் நடைபெற்ற முதல் சுற்றுப் போடியில் பிலிஸ்கோவா 7க்கு 5, 6க்கு 4 என்ற செட்களில் வெற்றியீட்டிருந்தார். பிலிஸ்கோவா தனது இரண்டாவது சுற்றில் அமெரிக்காவின் ஸ்லொஹ்ன் ஸ்டீபன்ஸை எதிர்கொள்கிறார்.
முன்னனி டென்னிஸ் நட்சத்திரமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ரோமானியாவின் ஐரினா கமேலியா பேகுவை 7க்கு6 (8/6), 6க்கு 2 என்ற செட்களில் வெற்றிபெற்றதுடன், அடுத்த சுற்றில் மற்றுமொரு ரோமானிய வீராங்கனையான மிக்கேலா புஸாரென்ஸ்கியுவை சந்திக்கவுள்ளார்.
தரவரிசையில் முதல் நிலை வீராங்கனையான அவுஸ்திரேலியாவின் அஷ்லி பார்ட்டி அமெரிக்காவின் பேர்னார்டா பெராவிடம் போராட்டத்தை எதிர்கொண்டார். இச்சுற்றின் முதல் செட்டை 6க்கு3 என்ற கணக்கில் பார்ட்டி கைப்பற்றியபோதிலும், இரண்டாவது செட்டில் 3க்கு 6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். எனினும், சுதாரித்துக்கொண்ட பார்ட்டி, மூன்றாவது செட்டை 6க்கு 2 என்ற கணக்கில் தன்வசப்படுத்தி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார். இவர் தனது இரண்டாவது சுற்றில் போலாந்தின் மெக்டா லினெட்டுடன் மோதவுள்ளார்.