“எனக்கு விஜய் சார்னா ரொம்பப் பிடிக்கும். ஆனா அவர் கூடவே நடிப்பேன்னு நான் நெனச்சுக்கூட பார்த்தது இல்ல. ஸ்கூல்ல கலைவிழாக்கள்ல பங்கெடுத்துக்கிட்டதோட சரி. நான் கேமரா முன்னால நடிச்சதே இல்ல. எல்லாத்துக்கும் அட்லீ சார்தான் காரணம். ஷூட்டிங் நாள்களையெல்லாம் இப்ப நினைச்சாக் கூட ஃபாரீனுக்கு போன மாதிரி இருக்குது” – பால்யத்தின் கனவுகள் மாறாமல் பேசுகிறார் ‘ஜூனியர் வடிவேலு’ ராஜமாணிக்கம்.
ஒடிந்த தேகம், ‘ராசாவின் மனசு’ காலத்து வடிவேலுவின் உடல்மொழி என அப்படியே வடிவேலுவை பிரதிபலிக்கிறார் ராஜமாணிக்கம். பேச்சிலும் அதே கிராமத்து மண்மணம் வீசுகிறது. வடிவேலுவின் ஜூனியர் வெர்ஷனாக மெர்சலில் மெர்சல் காட்டியிருக்கும் ராஜமாணிக்கம் தற்போது பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார்.
எப்படிக் கிடைச்சது இந்த வாய்ப்பு?
”அட்லீ சாரோட அடுத்த படத்துக்கு சின்ன வயசு வடிவேல் சாயல்ல ஆள் கேட்குறாங்கனு எங்க மாமா நாகேஷ் பூபதிகிட்ட அவர் ஃப்ரெண்ட் சொல்லவும், என்னய மதுரை ஆடிஷனுக்குக் கூட்டிட்டு போனாங்க. வைகைப்புயல் மாதிரி நடிக்க, பேசச் சொல்லி டெஸ்ட் வெச்சாங்க. அப்புறம் சென்னைல அடுத்த கட்ட ஆடிஷன் நடந்தது. அதுல அட்லீ சார் பார்த்துட்டு டபுள் ஓகேனு சொல்லிட்டார்”.
எப்படி இருந்துச்சு விஜய்யோட நடிச்ச அனுபவம்?
”முதல் நாள் முதல் ஷாட்டே விஜய் சார் கூடத்தான். அன்னைல இருந்து ஒருவாரத்துக்கு என்னய நானே கையில புடிக்க முடியாம பறந்துகிட்டு இருந்தேன். பனையூர், ராஜஸ்தான்னு மொத்தம் ஐம்பது நாள் நடிக்க வச்சாங்க. டைரக்டர் சாரும் விஜய் சாரும் நல்லா நடிக்கிறேன்னு சொன்னாங்க. கூடவே நல்லா படிக்கணும்னு அட்வைஸ் பண்ணாங்க. இப்போதைக்கு அவ்ளோதான் சொல்லமுடியும் அண்ணே! படம் வரவும் பார்த்துட்டுச் சொல்லுங்க.”
உங்க குடும்பம் பத்தி சொல்லுங்க.?
”அப்பா அம்மா ரெண்டு பேருமே கூலி வேலை பார்த்துதான் படிக்க வைக்கிறாங்க. சொந்த ஊரு ராசிபுரம் பக்கத்துல சின்ன கிராமம். அவுங்களுக்கு ரொம்ப சந்தோஷம். நடிக்கப் போறேன்னு சொன்னதும் ஃப்ரெண்ட்ஸ் எல்லோருமே என்னய ஹீரோ மாதிரி பாக்க ஆரம்பிச்சாங்க. விஜய் சார்கிட்ட அவுங்கள பத்தி சொல்லச் சொல்லி கேட்டுகிட்டாங்க.
ஐம்பது நாள் லீவ்னா ஸ்கூல்ல ஏதாவது சொல்லியிருப்பாங்களே?
”ஷூட்டிங் டைம்ல நான் ஒன்பதாவது படிச்சிட்டு இருந்தேன். அதனால நான் கேட்குறப்ப எல்லாம் லீவ் குடுத்தாலும் கரெக்ட்டா படிக்க வச்சுருவாங்க எங்க ஸ்கூல்ல. இப்போ பத்தாவது வந்தாச்சு. இனியும் லீவ் எடுத்துகிட்டு இருக்க முடியாதே. அதனால, லீவுக்கெல்லாம் லீவு விட்டு படிச்சுக்கிட்டு இருக்கேன்.
அப்போ சினிமாவுல நடிக்கிறதுக்கும் லீவ் விட்டாச்சா?
தொடர்ந்து நிறைய படங்கள் நடிக்கணும்னு ஆசை இருக்கு. அதே சமயம், படிச்சு டாக்டராகணுங்கிற கனவும் இருக்கு. பார்ப்போம் அண்ணே! என வடிவேலு ஸ்டைலிலேயே முடிக்கிறார் ராஜமாணிக்கம்.