சென்னை மாநகரப் பேருந்துகளில் மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை ரூ 1300 ஆக உயர்த்த ஆலோசிக்கப்படுகிறது.
டீசல் விலை உயர்வால் மாநகர போக்குவரத்து கழகத்துக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டதால், கடந்த ஜனவரி மாதம் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. சென்னையில் 3,200 மாநகர பஸ்கள் ஓடுகின்றன. நாள்தோறும் 40 முதல் 45 லட்சம் பயணிகள் பயணம் செய்கிறார்கள்.
பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட பின்பு எதிர்பார்த்ததை விட வருவாய் குறைந்தது. கட்டணம் உயர்த்தப்பட்டதால் பயணிகள் மின்சார ரெயில், இரு சக்கர வாகனம் போன்றவற்றை பயன்படுத்தத் தொடங்கியதால் இந்த இழப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே மாநகர பஸ்களில் மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை உயர்த்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தற்போது மாதாந்திர பாஸ் ரூ.1000-க்கு வழங்கப்பட்டு வருகிறது. கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் கணிசமான வருவாய் கிடைக்கும் என்பதால் மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.1000-ல் இருந்து ரூ.1,300 ஆக உயர்த்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.