சென்னை: தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பெப்ரவரி 16 முதல் மார்ச் 6 வரை என 19 நாட்கள் 45வது புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் ஜனவரியில் நடைபெற வேண்டிய புத்தக கண்காட்சி இன்று துவங்கியுள்ளது. கொரோனா தொற்று காலமாக இருப்பதால் பேரிடர் மேலாண்மை விதிகளை பின்பற்றி கண்காட்சி நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் துவக்கி வைத்து, அரங்குகளை பார்வையிட்டார். இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.
இங்கு, 800 அரங்குகளில் 500க்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் 1 லட்சத்திற்குப் மேலான தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெறுகின்றன. புத்தகங்களுக்கு குறைந்தபட்சம் 10 சதவீத தள்ளுபடி யும் அறிவிக்கப்பட்டுள்ளது. அறுசுவை அரசு எனும் குறைந்த விலையிலான தரமான உணவகம் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நாள் தவிர பிற நாட்களில் வாசகர்கள் அதிகம் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் கொரோனா தொற்று மூன்றாம் அலையாக இருப்பதால், கடந்தாண்டு பின்பற்றப்பட்ட கொரோனா பாதுகாப்பு செயல்முறையே தற்போதும் பின்பற்றப்படும்.
புத்தக கண்காட்சிக்கு வருவதற்காக bapasi. Com என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் புத்தக கண்காட்சிக்கான டிக்கெட் பெறலாம். அனைத்து நாட்களும் காலை 11 மணி முதல இரவு 8 மணி மணிவரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. தொல்லியல் துறை சார்பில் 5 ஆயிரம் சதுர அடியில் தமிழர் பண்பாடு தொடர்பான அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மொத்தம் 10 லட்சம் பேர் வருகை தந்தனர். இந்தாண்டு கூடுதலாக வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு சென்னை பகுதி கல்வி நிறுவனங்களில் பயிலும் 10 லட்சம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக டிக்கெட் வழங்கப்பட உள்ளது.
மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் ஆன்லைன் முறையில் நடைபெறுகிறது. மாணவர்களுக்கு 6 முதல் 8 , 9, 10 மற்றும் 11, 12 வகுப்புகளுக்கு தனித்தனியாகவும், கல்லூரி மாணவர்களுக்கு தனியாகவும் நடைபெறும். பேச்சுப்போட்டியில் முதலிடம் பெறும் வெளிநாட்டு மாணவருக்கு 100 டாலர் வரை பரிசு வழங்க முடிவு செய்துள்ளோம். ஓவியப் போட்டியும் நடைபெற உள்ளது.
புத்தக கண்காட்சியில், புத்தகம் வாங்கி வாசித்து அந்த புத்தகம் பற்றி 2 நிமிடம் சிறப்பாக பேசும் மாணவர் ஒருவருக்கும் பரிசு வழங்கப்படும். சிறந்த பேச்சாளராக தேர்வாகும் மாணவருக்கு மேடையில் பேச வாய்ப்பு வழங்கப்பட்ட உள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]