சென்னை கடற்கரை சாலையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்ற தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நடிகர் சிவாஜி கணேசன் சிலை, மெரினா கடற்கரைக்கு செல்லும் ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் காமராஜர் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும் அதனை அகற்ற வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாகள நடிகர் திலகம் சிவாஜி சமுகநலப் பேரவைத் தலைவர் கே.சந்திரசேகரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவாஜி சிலையை கடற்கரை சாலையில் இருந்து அகற்றி மணி மண்டபத்தில் வைக்க தடையில்லை என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மெரினா சாலையில் இருந்து அகற்றப்படும் சிலையை காமராஜர் சாலையில் உள்ள மணி மண்டபத்தில் வைக்க வேண்டும் என்று மனுதாரர் கோரியிருந்தார். அதற்கு எந்தவித தடையும் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. சிவாஜியின் நினைவு தினமான ஜூலை 21ம் தேதி அவரது சிலையை அகற்றக் கூடாது என்றும் மனுதாரர் கோரிக்கை வைத்தார். இதனைத் தொடர்ந்து, 4 வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.