சென்னையில் தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. கடந்த 12-ந்தேதி அதிகபட்சமாக 7,564 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதன்பிறகு நோய்தொற்று 7 ஆயிரத்துக்கும் கீழ் பாதிவாகி வந்தது. கடந்த 20-ந்தேதி வரையில் கிட்டத்தட்ட ஒருவார காலம் இந்த பாதிப்பு சீராக நீடித்தது.
கடந்த 21ந்தேதியில் இருந்து நோய் தாக்கம் சென்னையில் படிப்படியாக குறையத்தொடங்கியது. 6 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இதன்பிறகு கொரோனா தினசரி பாதிப்பு அதற்கு மேல் கூடாமல் வெகுவாக குறையத்தொடங்கியது. இப்படி படிப்படியாக குறைந்த கொரோனா தொற்று கடந்த 26-ந்தேதி 4 ஆயிரத்துக்கும் கீழ் சென்றது. இந்த தினசரி பாதிப்பு மறுநாள் 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது.
கடந்த 6 நாட்களாக தொடர்ந்து சென்னையில் 3 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
கொரோனா தினசரி தொற்று சென்னையில் பெருமளவு குறைந்து வந்த போதிலும் உயிரிழப்புகள் மட்டும் குறையாமல் இருந்து வந்தது. கடந்த 12-ந்தேதியில் இருந்து தொடர்ச்சியாக தினசரி உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே இருந்தன.
இந்த தினசரி பலி எண்ணிக்கை கடந்த 16-ந்தேதி சற்று குறைந்து இருந்தது. அன்று 60 பேர் உயிரிழந்து இருந்தார்கள். ஆனால் அதன்பிறகு தினசரி பலி எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அடங்காமல் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
கடந்த 2 வாரங்களாக கொரோனா உயிரிழப்புகள் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அதிகரித்துக் கொண்டே சென்றது. கடந்த மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் 85 பேர் உயிரிழந்து இருந்த நிலையில் 21-ந்தேதி தினசரி உயிரிழப்பு 109 ஆக அதிகரித்தது. அதன்பிறகு 4 நாட்கள் 90-க்கும் குறைவானவர்கள் தினமும் உயிரிழந்து வந்தனர்.
ஆனால் கடந்த 28-ந் தேதி அதிகபட்சமாக சென்னையில் 107 பேர் பலியானார்கள். கடந்த மாதத்தில் கடைசி 3 நாட்களும் பலி எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. கடந்த 29-ந்தேதி 85 பேரும், 30-ந்தேதி 93 பேரும், 31-ந் தேதி 91 பேரும் உயிரிழந்து இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு பிறகு தினசரி பலி எண்ணிக்கை சென்னையில் வெகுவாக குறைந்து இருக்கிறது. நேற்று 58 பேர் மட்டுமே உயிரிழந்திருக்கிறார்கள். இதன் மூலம் சென்னையில் உயிரிழப்பு பாதியாக குறைந்து இருக்கிறது. இது பெரிய அளவில் ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இதன் மூலம் பொது மக்களும், மாநகராட்சி அதிகாரிகளும் நிம்மதி பெரு மூச்சுவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘முழு ஊரடங்குக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
இன்று முதல் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் தமிழகம் முழுவதுமே நோயின் தாக்கம் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சென்னையில் நோய் தொற்று வேகமாக சரிந்து வந்தது. தற்போது உயிரிழப்பும் குறைந்து இருக்கிறது. வரும் காலங்களில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் குறையும்’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.