எதிர்வரும் 48 மணிநேர தேர்தல் பிரசார சூனிய காலப்பகுதியில் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு சகல பொலிஸ் நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரசார பணிகள் நேற்று நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைந்துள்ளன. இனையடுத்து தேர்தல் வாக்குப் பதிவு இடம்பெறும் வரையிலான காலப்பகுதி தேர்தல் பிரசார சூனியப் பகுதியாகும். இக்காலப் பகுதியில் தேர்தல் சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக தராதரம் பாராது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் (08) முதல் தேர்தல் பாதுகாப்பு முன்னேற்பாடுகளில் 4,000 விசேட அதிரடிப்படையினர் அடங்கலாக 65, 758 பொலிஸார் ஈடுபடுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர்,தேவை ஏற்பட்டால் கடமையில் ஈடுபடுத்துவதற்கென கலகமடக்கும் பொலிஸாரும் இராணுவத்தினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.