நான் ஒரு விறுமாந்தவள் நான் ஒரு பிடிச்சிராவி நான் ஒரு துணிச்சல்காரி என்னை நினைக்கும்போது எனக்கே பயம் வருகிறது புலியும் ஆமியும் சமாதானம் பேசி ரணிலின் சூழ்ச்சியில் விழுந்தகாலம் பத்திரிகைத்தொழிலும் பல்கலை கல்வியுமாக நான் யாழ்ப்பாணத்தில் அலைந்த காலம் எம் சகபணியாளர்கள் ஒவ்வொருவராக சுடப்பட்டு வீதியில் போடப்பட்ட கொடிய காலம் வந்தது.
ஒவ்வொரு ஊடக உறவுகளையும் காவுகொடுத்தோம் சிறியவளாக நான் இருந்தாலும் பல மூத்த ஊடகவியலாளர்களால் புடம்போடப்பட்டவள் பேப்பர் விற்றுக்கொண்டிருந்த பதினேழு வயது பையனை பஸ்டாண்டில் வைத்து சுட்டுப் போட்டனர் நீ போய்விடு வன்னிக்கு என்கிறார் ராதேயன் அண்ணன் ,எம் ஆலோசகராக இருந்த அண்மையில் மறைந்த கோபு ஐயாவும் நீ போய்விடு அம்மா என்கிறார்
சரி போய்விடுகின்றேன் என கல்வியையும் கைவிட்டு வன்னிக்கு புறப்படுகின்றேன் அப்போதெல்லாம் என்னிடம் இருந்த ஒரே ஒரு சொத்து அந்த பழைய இரும்புக்கும் தேறாத கப்பிரேக் சயிக்கிள் அதையும் தூக்கி பஸ்ஸில் போட்டுவிட்டு புத்தகங்களையும் உடுப்புகளையும் உரப்பையில் கட்டி அதையும் பஸ்ஸில் போட்டுவிட்டு முகமாலை வருகின்றேன்முகமாலையில் இருந்து சூனியப்பிரதேசம் கடந்து போகும் பஸ்ஸுக்கு கரியர் இல்லை அதனால் என் சயிக்கிளை அதில் போடமுடியாது என்றுவிட்டான் கன்டெக்ட்டர் .”பாவமடா பொம்பிளைப்பிள்ளை இதுக்குள்ளால எப்பிடி வாறது உள்ளுக்குள்ளை ஏத்தடா சயிக்கிளை” என்றான் அவனின் நண்பன் முடியாது என்றுவிடடான் அந்த மூடன்சரி புத்தகங்களையும் உடுப்புகளையும் புலிகளின்பொயிண்டில்போடு நான் வருகிறேன் என்றுவிட்டு சயிக்கிளை எடுத்தேன்.
தனி ஒருத்தியாய் அந்த சூனிய பிரதேசத்தை கடக்க துணிகிறேன்யாருமற்ற பெரு வீதி யாரும் வரவேண்டாம் என்பதுபோல் தனிமையை ரசித்தபடி பரவி, நீண்டு, விரிந்து கிடந்தது .
கிட்ட தட்ட ஐந்து கிலோமீற்றர் வரும்போல இருக்கு சரியாக நினைவில்லைசுற்றும் முற்றும் பார்க்கிறேன் யாருமே இல்லை. என்னைத்தாண்டி என் உடமைகளை கொண்டுபோகும் பஸ் விர் என்று பறக்கிறது”எது நடக்கப்போகின்றதோ அதுவரைக்கும்தான் நான் ” அது நடந்து முடிந்துவிட்டால் நான் யார் என்பதை இந்த நடுத்தெருவில் விட்டுப்போகும் நாதாரிகள் அறியட்டும் என கறுவிக்கொண்டு சயிக்கிளை மிதிக்கிறேன்என் விவேகங்களை ஊடுகடத்தி காலுக்கு வேகத்தை கொடுக்கிறது மூளை – முதலாவது வளைவு தாண்டுகின்றேன்
யாரும் இல்லை இருபக்கமும் வடலிப் பனைகள் கிளுகிளுத்து பட படபட வென அடித்துக்கொள்கிறது ‘இவள் எங்கே இப்பிடி தனியே போகிறாள் என்பதுபோல் இருந்தது அந்த வடலிகளின் படபடப்பு ,நீண்ட வீதி – தீச்சுவாலையில் கருகிப்போன பனைகளும் தென்னைகளும் தலையற்ற முண்டங்களாய் என்னை பார்க்கின்றன அங்கங்கே திட்டு திட்டுத் திட்டாய் சாம்பல் மேடுகள் ,நாயுன்னி மரங்கள் பூக்களை சொரிந்திருந்தன ,எனக்கு என்ன நடந்தாலும் யாருக்கும் தெரியாத திகில் நிறைந்த இடம் மனதில் இயல்ப்பை தவிர வேறேதும் இருக்கவில்லை.
சயிக்கிளை மிதிக்கிறேன் புலியும் இல்லாத ஆமியும் இல்லாத அந்த பகுதி திகில் சாம்ராய்ஜத்தின் தலைநகரமாய் கம்பீரமாய் இருந்தது அந்த பனி அகலும் காலையில் சூரிய கதிர்களை உடல் பூராக தழுவிக்கொண்டு, மெல்லிய காற்றை கிழித்துக்கொண்டு அந்த சூனியப்பிரதேசத்தை கடக்கிறேன் தமிழீழ இராட்சியத்தின் இளவரசியாக ….புலிகளின் வரவேற்பு கொட்டகைக்கு சற்று முன்பாக என் புத்தகங்களும் ஆடைகளும் அநாதரவாக கிடக்கிறது .அங்கிருந்த போராளிகள் கண்கள் விரிய என்னை பார்த்து தலையசைத்தனர் – ப்ரியமதா