முகமது ஷமி மீதான சூதாட்ட புகார் குறித்து ஊழல் தடுப்புக்குழு விசாரிக்க உள்ளது. இதன் அடிப்படையில் தான் இவரது அடுத்தக் கட்ட கிரிக்கெட் வாழ்க்கை அமையும்.
இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, 27. இவர் மீது தனிப்பட்ட முறையில் பல குற்றச்சாட்டுகளை சுமத்திய மனைவி ஹாசினி ஜகான், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் புகார் கூறினார். இது, குறித்து விசாரிக்க, இந்திய கிரிக்கெட் போர்டுநிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய், ஊழல் தடுப்புக்குழு தலைவர் நீரஜ் குமாருக்குஉத்தரவிட்டார்.
அறிக்கையில் முடிவு
பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘பாகிஸ்தானின் அலிஸ்பா என்ற பெண்ணிடம்இருந்து ஷமி பணம் பெற்றார் என இவரது மனைவி சூதாட்ட புகாரை தெரிவித்துள்ளார். இது குறித்து ஊழல் தடுப்புக்குழு விசாரிக்க உள்ளது. இந்த அறிக்கையில், ஷமி எந்த தவறும் செய்யவில்லை என தெரியவந்தால், உடனடியாக சம்பள ஒப்பந்த பட்டியலில் சேர்க்கப்படுவார். இவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நாங்கள் முடிவு செய்ய வேண்டியது இல்லை. இப்பிரச்னையில், கோல்கட்டா போலீசார்தான் முடிவு செய்வர்,’’ என்றார்.
கங்குலி வலியுறுத்தல்
கோல்கட்டா கிரிக்கெட் சங்க தலைவர் மற்றும் ஐ.பி.எல்., நிர்வாக கவுன்சில் உறுப்பினர் கங்குலி கூறுகையில்,‘‘ ஷமி பிரச்னை குறித்து நீரஜ் குமார் விசாரித்து வருகிறார். இந்த அறிக்கை கிடைக்கும் வரை, ஷமி விஷயத்தில் எந்த முடிவும் எடுக்கக்கூடாது,’’ என்றார்.
பி.சி.சி.ஐ., தற்காலிக தலைவர் சி.கே.கண்ணா கூறுகையில்,‘‘ நீரஜ் குமார் தனது அறிக்கையை இன்னும் 7 நாட்களில் சமர்பிப்பார். பின்தான், ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணிக்காக ஷமி விளையாடுவாரா எனத்தெரிய வரும்,’’ என்றார்.