சரணடைந்தவர்கள் உயிரோடு உள்ளதற்கு சூசையின் மனைவியும் சாட்சியே அழிப்பதே குறிக்கோளாக இருந்திருப்பின் அவரையும் வெட்டி கடலில் வீசியிருப்போம் என இராணுவத்தின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கமல் குணரத்தின தெரிவித்த நாகரிகமற்ற செயலை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில் ,
இறுதிப்போரின் போது சரணடைந்தவர்கள் எவரும் காணாமல் போகவில்லை எனவும் சரனடைந்தவர்கள் உயிரோடு உள்ளதற்கு விடுதலைப்புலிகள் அமைப்பின் கடற்புலிகள் அமைப்பின் தளபதி சூசையின் மனைவியும் சாட்சியாகவே உள்ளார். எனக் குறிப்பிட்டதோடு சரணடைந்தவர்களை அழிப்பதே குறிக்கோளாக இருந்திருப்பின் சூசையின் மனைவியையும் வெட்டி கடலில் வீசியிருப்போம் என இறுதிப்போரில் பங்கு கொண்டிருந்த இராணுவத்தின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கமல் குணரத்தின கூறியமை ஓர் நாகரிகமற்ற செயல்.
இங்கே குணரட்ன தெரிவித்த கருத்து பல ஐயங்களை ஏற்படுத்தி நிற்கின்றது. அதாவது சரண்டைந்த புலிகளில் 12 ஆயிரம் பேரை புனர்வாழ்வின் பின்னர் சமூகத்துடன் இணைத்துள்ளோம் என ஆளும் அரசுகள் மாறி மாறி பிதற்றினாலும் இதனைவிட மேலும் பல ஆயிரக்கணக்கான சரண்டைந்தோர் உறவுகளால் ஒப்படைக்கப்பட்டவர்களிற்கு என்ன நடந்த்து என இந்த அரசோ படைகளோ இதுவரை உண்மையை தெரிவிக்கவே இல்லை.
இந்த நிலையில் இறுதிப் போர் இடம்பெற்ற காலத்தில் இராணுவத்தில் ஓர் உயரதிகாரியாக இருந்த இந்த குணரட்ன இவ்வாறு தெரிவித்தது ஓர் நாகரிகமற்ற வார்த்தைப் பிரயோகம் எனபதற்கும் அப்பால் இச் சொல்லினை சர்வதேச சமூகமும் நன்கு கவனிக்க வேண்டும். ஏனெனில் இராணுவத்தினரிடம் உறவுகளால் ஒப்படைக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான போராளிகளும் வெள்ளைவான்கள் மூலம் அரச படைகளால் கடத்தப்பட்டோரும் இன்றுவரை வீடு திரும்பவில்லை.
அதேநேரம் எந்தப்பகுதியில் எந்த முகாமிலும் எவரும் இரகசியமாக தடுப்பில் இல்லை என ஜனாதிபதி கூறுகின்றார். அவ்வாறானால் எமது உறவுகளிற்கு என்ன நடந்த்து என்பதனை பகிரங்கமாக உண்மையை கூறவேண்டும். இந்த குணரட்ன வாய் தடுமாறி உண்மையை கூறி விட்டாரோ என்ற அச்சமும் எம்மனதில் எழுகின்றது. அதாவது அவ்வாறு எமது உறவுகளை வெட்டிக் கடலில் வீசியதனையே கூறுகின்றாரா? என்பது தொடர்பிலும் ஆராயவேண்டிய நிலமை ஏற்படுகின்றது. என்றார்.