வறுமையின் காரணமாக இந்திய தாயால் சுவிட்சர்லாந்து தம்பதியிடம் தத்துக்கொடுக்கப்பட்ட ஒருவர் அந்நாட்டின் எம்.பி.யாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
48 வயதான Niklaus-Samuel Gugger என்கிற அந்த நபர் சுவிட்சர்லாந்து நாட்டு நாடாளுமன்ற உறுப்பினராகும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த அனுசுயா என்கிற பெண்ணுக்கு கடந்த 1970ம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி உடுப்பி நகரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் பிறந்தார் நிக்லாஸ் சாமுவேல்.
பிறந்த ஒரு வாரத்தில் குடும்ப வறுமை காரணமாக சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த Fritz மற்றும் Elizbeth தம்பதிக்கு தத்துக்கொடுக்கப்பட்டார் நிக்லாஸ்.
கேரளாவில் சுமார் 4 ஆண்டுகள் வாழ்ந்த அந்த தம்பதியினர் பின்னர் சுவிட்சர்லாந்தில் உள்ள தங்கள் சொந்த ஊருக்குச் சென்றனர்.
அங்கு தனது வளர்ப்பு பெற்றோருக்கு அதிக சிரமத்தைக் கொடுக்காமல் படிக்கும்போதே தோட்ட வேலை, லொறி ஓட்டுனர் வேலைகளை செய்து உயர் கல்வி பயின்ற நிக்லாஸ் இன்று சுவிட்சர்லாந்து நாட்டின் முதல் இந்திய வம்சாவழி எம்.பி என்கிற பெருமையை அடைந்துள்ளார்.
மறக்க முடியாத தமது வாழ்க்கைப் பயணம் குறித்து நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்த நிக், கேரள மாநிலத்தில் தலச்சேரியில் முதல் 4 ஆண்டுகள் வாழ்ந்ததாகவும், அப்போது தமது சுவிஸ் பெற்றோர் ஜேர்மன் மற்றும் ஆங்கில மொழி ஆசிரியர்களாக பணியாற்றி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு Winterthur நகரின் கவுன்சிலராக தெரிவான நிக், நவம்பர் 2017 ஆம் ஆண்டு சுவிஸ் நாடாளுமன்றத்தின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தம்மை பெற்றெடுத்த தாயாரின் நினைவாக தமது மகளுக்கு அனசூயா என்றே பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.