சுழலில் மிரட்டிய மிஸ்ரா: ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்தியா
இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் டோனி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.
இதன் படி தொடக்க வீரர்களாக ரஹானே மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் களமிறங்கினார்கள். ரஹானே 20 ஓட்டங்கள் எடுத்த நிலையில் நீசம் பந்தில் லாதமிடம் பிடி கொடுத்து வெளியேறினார்.
இதன் பின்னர் ரோஹித் சர்மாவுடன் விராட் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். மெதுவாக ஆட்டத்தை தொடங்கிய ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 49 பந்தில் அரைசதம் அடித்தார்.
ரோஹித் சர்மா 70 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 65 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் இந்த ஓட்டங்களை எடுத்தார்.
பிறகு விராட் கோஹ்லியுடன் அணித்தலைவர் டோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகவும் மந்தமாக விளையாடியது.
டோனி 59 பந்தில் 41 ஓட்டங்களும், விராட் கோஹ்லி 76 பந்தில் 65 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
மனீஷ் பாண்டே டக்- அவுட்டானார். கடைசி நேரத்தில் அக்சேர் படேல் (24), கெடார் ஜாதவ் (39) ஆகியோர் நிதானமாக ஓட்டங்கள் சேர்க்க, இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 269 ஓட்டங்கள் சேர்த்தது.
நியூசிலாந்து அணி சார்பில், போல்ட், சோதி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
நியூசிலாந்து அணியை சூறையாடிய மிஸ்ரா
இதன் பின்னர் 270 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாய் அமைந்தது.
தொடக்க வீரர் குப்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதைத் தொடர்ந்து லாதம் (19), அணித்தலைவர் வில்லியம்சன் (27) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, டெய்லரும் (19) நிலைக்கவில்லை.
இதன் பின்னர் அமித் மிஸ்ரா நியூசிலாந்து அணியை சுழலில் மிரட்ட ஆரம்பித்தார். இதனால் அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் ஓரிலக்க ஓட்டங்களில் நடையை கட்டினர்.
முடிவில் நியூசிலாந்து அணி 23.1 ஓவரிலே 79 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இந்தியா 190 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை 3-2 என கைப்பற்றியது.
இந்திய அணி சார்பில், அமித் மிஸ்ரா 18 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.