2023 ஐரோப்பிய சம்பியன்ஷிப் சுப்பர் லம்போர்கினி போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை நன்கொடையாளர்களிடமிருந்து சுமார் 70 மில்லியன் ரூபா நிதியை வசூலிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கையின் பிரபல கார்பந்தய வீரரான டிலன்த்த மாலகமுவ தெரிவித்தார்.
இவ்வாண்டு ஆண்டு மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 12 ஐரோப்பிய நாடுகளில் நடைபெறவுள்ள, இப்போட்டிக்கான நிதியை பெற்றுக்கொள்வதற்காக எதிர்வரும் 23 ஆம் திகதியன்று இரவு 7 மணிக்கு கொழும்பு விகாரமஹா தேவி பூங்காவின் திறந்தவெளி அரங்கில் இசை நிகழ்ச்சியொன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
நீர்கொழும்பிலுள்ள ஹோட்டலொன்றில் அண்மையில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்திருந்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
” 2023 ஐரோப்பிய சூப்பர் லம்போர்கினி சாம்பியன்ஷிப் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, பெல்ஜியம் மற்றும் ஸ்பெய்ன் உள்ளிட்ட 12 நாடுகளில் எதிர்வரும் மே முதல் நவம்பர் வரை நடைபெறவுள்ளது.
அந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களும், ஐரோப்பா, ஆசிய மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் சுப்பர் லம்போர்கினி கார் சம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களும், இத்தாலியில் நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்பார்கள். இதில், அவர்கள் பெறும் புள்ளிகளின் அடிப்படையில், உலக சம்பியன் பட்டத்தை வென்றெடுப்பார்.
இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக 200 மில்லியன் ரூபா முதல் 250 மில்லியன் ரூபா வரையில் செலவாகும். எனினும் 70 மில்லியன் ரூபா தொகையை நான் செலுத்த வேண்டும். எஞ்சிய தொகையை லம்போர்கினி மோட்டார் நிறுவனத்தால் வழங்கப்படும்” என்றார்.