சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த பத்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியான ‘வேட்டையன்’ திரைப்படம் இதுவரை இந்திய மதிப்பில் 240 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
இதனைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
‘ஜெய் பீம்’ எனும் வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் த. செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் ‘வேட்டையன்’. சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , அதியன் எனும் காவல்துறை உயரதிகாரி வேடத்தில் நடித்திருந்தார்.
படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூலில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.
இந்தத் திரைப்படம் இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உலக அளவில் 240 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
மேலும் இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே தொலைக்காட்சி உரிமை -டிஜிட்டல் தள உரிமை , இசை உரிமை ஆகிய வகைகளில் இந்திய மதிப்பில் 210 கோடி ரூபாய் அளவிற்கு வணிகம் நடைபெற்றுள்ளதாக திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இதனால் 300 கோடி ரூபாய் பட்ஜட்டில் தயாரான ‘வேட்டையன்’ திரைப்படம் மொத்தமாக 450 கோடி ரூபாயை வசூலித்திருப்பதால் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிப் படம் என்றுதான் திரையுலக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள்.
அதே தருணத்தில் ‘வேட்டையன்’ திரைப்படம் இதற்கு முன் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் வசூலை எட்டவில்லை என்றும், கடந்த பத்தாம் திகதியன்று வெளியான இந்த திரைப்படம் பட மாளிகைகளிலிருந்து இதுவரை 160 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பதாகவும் ஒரு பிரிவு திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.