சுகாதாரம் அல்லது சுத்தம் என்பது நலம் மற்றும் நலமான வாழ்வு கருதி ஒரு சமூகத்தால் பேணப்படும் பழக்க வழக்கங்களாகும். ஆரம்ப கால மக்கள் இயற்கையோடு தொடர்பு கொண்டு வாழ்ந்ததால் அவர்களின் வாழ்வில் சுகாதாரம் என்பது உயிரினும் மேலாகக் கருதப்பட்டது.ஆனால் இன்றைய நவீன காலகட்டக் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது அதிகரித்து வரும் மக்கள்தொகை, வளங்களின் குறைபாடு, பொருளாதார நெருக்கடிகள் என்பவற்றின் விளைவால் சிறந்த சுகாதாரமானது குறைந்து கொண்டே வருகின்றது. இதற்கு காரணம் இன்றைய கால மனிதர்கள் செயற்கையின் பால் அடிபணிந்ததே முக்கிய காரணமாகும்.
மேலும் நலமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். இன்னொரு காரணி கழிவு வெளியேற்றமாகும். உணவு உண்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் கழிவு நீக்கம். இதை இரண்டும் சம அளவில் இருக்க வேண்டும். இவற்றில் ஒன்று குறைந்து மற்றொன்று கூடினாலோ ஆரோக்கியத்திற்கு வேட்டு வைப்பதாகும்.
ஆரோக்கியமான வாழ்வுக்கு முக்கியமாக உணவு அருந்தும் முன்பு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். கைகளை சுத்தப்படுத்தாமல் உணவு உண்பதால் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து வயதிற்கு கீழுள்ள சுமார் 20 லட்சம் குழந்தைகள் நிமோனியா, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் மூலம் இறந்து போவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கைகளை சுத்தமாக கழுவுவதன் மூலம் உயிர் கொல்லி நோய்கள் பரவுவதையும் தடுக்கலாம். சுகாதாரத்தை பயன்படுத்தி பின்பு காயத்திற்கு மருந்து போடுவதற்கு முன், பின், தும்மல் வந்த பின்பு, இருமல் வந்த பின்பு, உணவு சாப்பிடும் முன்பு, பின், குப்பைகளை கொட்டிய பின்பு, விலங்குகளை தொட்டபின்பு கைகளை சுத்தமாக கழுவவேண்டும்.
அடுத்து சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்துவதாகும். சுத்தமான நீரினைப் பயன்படுத்துவதன் மூலம் அசுத்தமான நீரினால் கிருமிகள் பெருகி காலரா, வயிற்றுப்போக்கு பரவுவது கட்டுப்படுத்தப் படும். அசுத்தமான தண்ணீரைக் குடிப்பதால் ஆண்டுக்கு உலகம் முழுவதும் 170 கோடிபேர் வயிற்றுப் போக்கினால் அவதிப்படுகிறார்கள். மூன்றாவது அம்சம் சுத்தமான உணவை உண்ணுதல் ஆகும். அடுத்து உடற்பயிற்சியாகும். காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்து, சூரிய ஒளியில் படும் படி அமர்ந்தால், சுகவாழ்வு கிடைக்கும்.
இந்தியாவில் பெருகி வரும் சுகாதார சீர் கேட்டினால் நாம் நினைத்தே பார்த்திராத அளவுக்கு விதவிதமான நோய்கள் பரவி வருகின்றன. பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல், டெங்கு, மூளைக்காய்ச்சல், சிக்குன் குனியா என்று பல விதமான நோய்கள் படையெடுத்துள்ளன. இவற்றை தவிர, என்னவென்றே கண்டுபிடிக்க முடியாத சில காய்ச்சல்களுக்கு மர்ம காய்ச்சல் என்று மருத்துவ உலகம் பெயரிட்டு விடுகிறது. எனவே ஆரோக்கிய வாழ்வுக்கு சுத்தமாக இருக்க பழகிக்கொள்ளுங்கள். சுத்தமான உடைகளை அணியுங்கள். வீட்டை சுத்தமாக வைத்து இருங்கள். வீட்டை சுற்றி சுற்றுப்புறத்தையும் குப்பை தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். சுகாதாரம் தொடர்பானவற்றை கடை பிடித்தால் நீங்கள் மருத்துவமனை செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. நோய் எனும் அரக்கன் இருக்கும் இடம் தெரியாமல் ஓடிவிடுவான்.