நீதிமன்ற விசாரணைக்கு அமெரிக்க சுதந்திரச் தேவி சிலை போன்று ஆடை அணிந்து வந்த கம்போடிய அமெரிக்க பெண் செயற்பாட்டளர் ஒருவருக்கு தேசத் துரோக குற்றச்சாட்டில் 6 வருட சிறைத்தண்டடனை விதித்து கம்போடிய நீதிமன்றமொன்று செவ்வாய்க்கிழமை (14) தீர்ப்பளித்துள்ளது.
நாடு கடந்த நிலையில் வாழ்ந்து தாய்நாடு திரும்பத் தவறிய அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் சாம் ரெயின்ஸியுடன் தொடர்புபட்டிருந்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 60 பேரில் தியறி செங் (51 வயது) என்ற மேற்படி செயற்பாட்டாளரும் ஒருவராவார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சிலர் ஏற்கனவே சிறைவாசம் அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் எத்தனை பேர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் என்பது அறியப்படவில்லை.
இந்த நீதிமன்றத் தீர்ப்பை வெட்கக்கேடான ஒன்று என தியறி செங் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நான் எனது சுதந்திரம் மற்றும் நீதிக்கான நம்பிக்கையை விடுத்து வாழ்வதை விடவும் சிறையில் இருக்கத் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
துணிச்சலாக கருத்துகளை வெளியிடும் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான அவர் இன்று செவ்வாய்க்கிழமை சுதந்திர தேவி சிலை அணிந்திருப்பதைப் போன்று பச்சை நிற ஆடையும் கிரீடமும் அணிந்து வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். இந்நிலையில் அவர் பொலிஸாரால் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.
அந்நாட்டுப் பிரதமர் ஹ{ன் சென்னின் ஆட்சிக்கு எதிராக எந்தவொரு சவாலும் விடுக்கப்படுவதை தடுக்கும் முகமாக அந்நாட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக பாரிய விசாரணையொன்ற முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1985 ஆம் ஆண்டு பிரதமர் பதவியைப் பொறுப்பேற்ற ஹன் சென் உலகில் நீண்ட காலம் சேவையாற்றிய பிரதமர்களில் ஒருவராக விளங்குகிறார்.
இந்நிலையில் எதிர்க்கட்சியான கம்போடிய தேசிய மீட்புக் கட்சித் தலைவர் ரெயின்ஸி பிரதமர் ஹ{ன் சென்னின் பிரதான எதிராளியாக நீண்ட காலமாக உள்ளார். 2019 ஆம் ஆண்டு ரெயின்ஸியின் கட்சி கலைக்கப்பட்ட நிலையில் அவர் தனக்கு எதிரான பல்வேறு வழக்குத் தாக்கல்களை எதிர்கொண்டுள்ளார். இந்நிலையில் ஆதரவாளர்கள் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.