தனிநாடு சுதந்திரம் கேட்கும் ஹாங்காங் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க சீனா முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கூறி உள்ளார். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் நாட்டின் காலனி ஆதிக்கத்தில் இருந்து வந்த ஹாங்காங்கை, 1997-ம் ஆண்டு ஜூலை1ந்தேதி சீனாவிடம் ஒப்படைந்ததது பிரிட்டன். அதிலிருந்து ஹாங்காங் சீனாவின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்து வருகிறது.
அதைத் தொடர்ந்து ‘ஒரே நாடு, இரட்டை நிர்வாகம்’ என்ற கொள்கையின் அடிப்படையில் ஹாங்காங்குக்கு சில கட்டுப்பாடுகளுடன் கூடிய தன்னாட்சி உரிமையை அளித்து சீனா தனது ஆளுமையின் கீழ் வைத்து கண்காணித்து வருகிறது.ஹாங்காங்கில் வாழும் மக்கள் சீன அரசை விமர்சித்தாலோ, அரசின் கொள்கைகள் மற்றும் சில திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலோ நேரடியாகவோ மறைமுகமாகவோ அவர்கள் தண்டிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஏற்கனவே சீன அரசின் தலைமையை விமர்சித்து எழுதிய 5 பத்திரிகையாளர்கள் திடீரென்று காணாமல் போனார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்பதே தெரியவில்லை.
இந்த சூழ்நிலையில் ஹாங்காங் மக்களின் சுதந்திரத்துக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்றும், ஹாங்காங் விடுதலை அடைய வேண்டும் என சில கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதன் காரணமாக ஹாங்காங்கில் அவ்வப்போது போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சுதந்திரம் கேட்டு போராடும் அரசியல் கட்சிகளை தடை செய்ய சீன அரசு முடிவு செய்திருப்பதாக ஹாங்காங் பாதுகாப்பு செயலாளர் ஜான் லீ தெரிவித்து உள்ளார்.தேசிய பாதுகாப்பு, பொத பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு போன்ற காரணங்களுக்காக இது போன்ற குழுக்களை தடைசெய்யலாமா என்பது குறித்து பரிசீலனை நடைபெற்று வருகிறது. பிரிவினைவாத உணர்வுகளுக்கு எதிரான ஆக்கிரோஷமான அரசியல் நடவடிக்கை அதிகரித்து வருவதாகவும், இது கவலையை ஏற்படுத்தி உள்ளது என்றும் ஜான் லீ தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சன் ஹோ-டின் அரசியல் கட்சிக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை நினைவு கூர்ந்த ஜான்லீ, மேலும் பல கட்சிகளையும், குழுக்களையும் தடை செய்ய இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
ஜான் லீயின் இந்த அறிவிப்பு ஹாங்காங்கில் பதற்றத்தையும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது