பல கலாசாரங்களைக் கொண்ட மக்கள் வசிக்கின்ற நாடே எமது நாடு. அதனால் இந்த நாட்டின் எதிர்காலம் இந்த பல்வகைமை கொண்ட மக்கட்குழுக்கள் மத்தியில் ஒற்றுமை நிலவினால் மாத்திரமே நிலைத்திருக்கும். அதனால் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி உங்களின் மதத்தை பின்பற்றுவதற்கான உரிமையை, மொழியைப் பேசுவதற்கான உரிமையை வழங்குகின்ற ஆட்சியாகும். உங்கள் கலாசார அடையாளத்தை ஏற்றுக்கொண்டு சுதந்திரமான நாட்டை உருவாக்குவதுதான் தேசிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
“நாடு அநுரவோடு” என்கிற தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டம் சாய்ந்தமருதில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி நிச்சயம்
நீண்ட காலமாக இந்த ஆட்சியாளர்கள் எமது நாட்டை ஆட்சி செய்தார்கள். நாடும் மக்களும் வறுமையின் அடிமட்டத்துக்கே போய் வீழ்ந்தனர். ஆட்சியாளர்கள் கட்டியெழுப்பப்பட்டார்கள், நாடு வீழ்ந்தது. நாங்கள் செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று அரசாங்கமொன்றை அமைப்போம்.
இந்த நாட்டைக் கட்டியெழுப்புகின்ற தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றை நாங்கள் அமைத்துக்கொள்வோம். இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி நிச்சயம். தெற்கில் வசிக்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் தேசிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்து இருக்கிறார்கள்.
சாய்ந்தமருதில் வசிக்கின்ற முஸ்லிம் மக்களின் தீர்மானம் என்ன? நீங்கள் உரத்த குரலில் கூறுவது போல் தேசிய மக்கள் சக்தியை வெற்றியீட்டச் செய்விப்பது உறுதியானது.
உங்கள் கலாசார அடையாளத்தை ஏற்றுக்கொண்டு சுதந்திரமான நாட்டை உருவாக்குவதுதான் தேசிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்பு.
எமது வெற்றியை தடுப்பதற்காக இன்று பல்வேறு தரப்பினர்கள் எமக்கு எதிரான சேறுபூசுதல்களிலும் பொய்யான தகவல்களை பரப்புவதிலும் ஈடுபட்டுள்ளார்கள்.
அண்மையில் ஹிஸ்புல்லா இங்கு வந்தாரா? அவர் வந்து எம்மைப் பற்றிய பல அவதூறுகளையும் பொய்களையும் கூறியிருக்கிறார். முஸ்லிம் மக்கள் மத ரீதியாக கொண்டாடுகின்ற இரண்டு தருணங்கள் இருக்கின்றன. ஒன்று, ரமழான் வைபவம். அடுத்தது, ஹஜ்ஜி வைபவம்.
நாங்கள் வந்ததும் இதில் ஒன்றை நிறுத்துவோமென ஹிஸ்புல்லா கூறியுள்ளார். அவருடைய மண்டையை பரிசோதித்துப் பார்க்கவேண்டும். மக்களை பள்ளிவாசலுக்குப் போக அனுமதிக்கமாட்டோம் எனவும் கூறியுள்ளார். இவர்கள் முஸ்லிம் மக்கள் மத்தியில் வந்து அவ்வாறான கதைகளைக் கூறுகிறார்கள்.
ஐக்கிய மக்கள் சக்தியின் திஸ்ஸ அத்தநாயக்க, நாங்கள் அதிகாரத்துக்கு வந்ததும் கண்டி பெரஹெரவை நடாத்தவிடமாட்டோம் என்று கூறுகிறார். அவர்களின் மேடைகளில் ஏறுகின்ற ஒருசில பிக்குமார்கள் நாங்கள் வந்தால் தானம் கிடைக்கமாட்டாதெனக் கூறுகிறார்கள். இவை அரசியல் கதைகளா? அவை அரசியல் விமர்சனங்களா? அவை குறைகூறல்கள். அவைதான் பொய்கள். உண்மையாகவே மதம் பற்றிய கௌரவம் இருக்குமானால், மதம் சம்பந்தமான சுதந்திரத்தை உண்மையாகவே எதிர்பார்ப்பின் அவற்றை அரசியல் மேடைகளில் கூறக்கூடாது. அவை மதவாதத்தைக் கிளப்புகின்ற பேச்சுகள்.
எமது நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம், மலாயர், பறங்கியர் வசிக்கின்ற நாடு. சிங்களவர்களுக்கு தமக்கே உரித்தான கலாசாரமொன்று தமிழர்களுக்கு தனித்துவமான கலாசாரமொன்று முஸ்லிம்களுக்கு தனித்துவமான கலாசாரமொன்று என்ற வகையில் பல கலாசாரங்களைக் கொண்ட மக்கள் வசிக்கின்ற நாடே எமது நாடு. அதனால் இந்த நாட்டின் எதிர்காலம் இந்த பல்வகைமை கொண்ட மக்கட்குழுக்கள் மத்தியில் ஒற்றுமை நிலவினால் மாத்திரமே நிலைத்திருக்கும். அதனால் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி உங்களின் மதத்தை பின்பற்றுவதற்கான உரிமையை, மொழியைப் பேசுவதற்கான உரிமையை வழங்குகின்ற ஆட்சியாகும். உங்கள் கலாச்சார அடையாளத்தை ஏற்றுக்கொண்டு சுதந்திரமான நாட்டை உருவாக்குவதுதான் தேசிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்பு.
தேசிய ஒற்றுமை நிலவுகின்ற ஒரு நாடே எங்களுக்குத் தேவை
இப்போது ஹிஸ்புல்லா பொய்யான உண்மையற்ற விடயங்களை பரப்பத் தொடங்கியிருக்கிறார். நாங்கள் எங்கள் கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டுள்ளோம். ஏதேனும் மதம் பற்றி, கலாசாரம் பற்றி, மொழி பற்றி எவரேனும் தீவிரவாதக் கருத்தினைப் பரப்புவாராயின் அதற்கெதிராக முறைப்பாடு செய்து சட்டத்தினால் தண்டனை வழங்கவதற்கான ஆணைக்குழுவொன்றை நியமிப்போம். அரசியலில் மதவாதக் கூற்றுகளை வெளியிடுவதை, இனவாதக் கூற்றுகளை வெளியிடுவதை நிறுத்துவதுதான் தேசிய சக்தி அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
தேசிய ஒற்றுமை நிலவுகின்ற ஒரு நாடே எங்களுக்குத் தேவை. அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ்கின்ற நாடே எமக்குத் தேவை. அதனால்தான் உங்களை சந்திக்க வந்திருக்கிறோம்.
செப்டெம்பர் 21ஆம் திகதி நாங்கள் வெற்றிபெற வேண்டும். தெற்கிலுள்ள மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது மாத்திரமல்ல, கிழக்கிலுள்ள உங்களின் நம்பிக்கையும் எமக்குத் தேவை. வடக்கிலுள்ள மக்களின் நம்பிக்கையும் எமக்குத் தேவை. இலங்கையில் முதல் தடவையாக தெற்கின் மக்களும் கிழக்கின் மக்களும் வடக்கின் மக்களும் மலையக மக்களும் ஏற்றுக்கொள்கின்ற அரசாங்கமொன்றை அமைத்திடுவோம். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரதும் நம்பிக்கையை வென்றெடுத்த ஓர் அரசாங்கத்தை நாங்கள் அமைத்திடுவோம்.
ஒற்றுமையின் இயக்கமொன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ளது
இதற்கு முன்னர் அரசியல் கட்சிகள் போட்டிக்கு வருவது எப்படியென உங்களுக்குத் தெரியும். சஜித் வருவது ஹக்கீமை தோளில் வைத்துக்கொண்டே. ரணில் வருவது அதாவுல்லாவை தோளில் வைத்துக்கொண்டே. நாங்கள் வருவது மக்களை தோளில் வைத்துக்கொண்டு… உங்களின் நம்பிக்கையால்தான். அதோ அவ்வாறான ஒற்றுமையின் இயக்கமொன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. அது தமிழ் மக்களை, சிங்கள மக்களை, முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற கட்சியையோ தலைவர்களையோ பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒன்றல்ல. அதுதான் தேசிய மக்கள் சக்தி. இன்று இங்கே பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் எமது சகோதர சகோதரிகள் ஒன்றுசேர்ந்து எமக்கு கூறுவது என்ன? எம்மை நம்பியமைக்காக உங்களுக்கு நன்றி. நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு துளியளவிலேனும் சேதமேற்படுத்தாமல் அதனைப் பாதுகாப்போமென நாங்கள் உங்களுக்கு உத்தரவாதமளிக்கிறோம்.
இனவாதத்தில் வீழ்ந்திடாத, அந்த சேற்றில் அமிழ்ந்துவிடாத ஒரே அரசியல் இயக்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமே
2015இல் மகிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தது உங்களுக்குத் தெரியும். அவர்கள் மீண்டும் அரசியலில் கரைசேர ஒரு பாதையைத் தேடிக்கொண்டு இருந்தார்கள். அவர்களால் திருட்டுகளை நிறுத்துகிறோம் எனக்கூறி அதிகாரத்தைப் பெறமுடியாது, ஜனநாயகத்தை நிலைநாட்டுவொம் எனக் கூறி அதிகாரத்தைப் பெறமுடியாமல், 2015இன் பின்னர் நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க முடியுமெனக் கூறி அதிகாரத்தைப் பெற முடியாது. அதனால் ராஜபக்ஷாக்கள் அதிகாரத்தைப் பெறுவதற்கான வீதி வரைபடமொன்றை தயாரித்து விரித்தார்கள். அதற்காக முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத இயக்கமொன்றை ஆரம்பித்தார்கள். உண்டால் மலடாகின்ற கொத்து ரொட்டி தயாரிப்பதாகக் கூறினார்கள். மீண்டும் வருவதற்காக இனவாதத்தை விதைக்கத் தொடங்கினார்கள். முஸ்லிம் கடைகளில் மலட்டு உடைகளை விற்பதாகக் கூறினார்கள். அவற்றை அணிந்தால் மலட்டுத்தன்மை ஏற்படுமெனக் கூறினார்கள். இனவாதத்தைக் கிளப்பினார்கள். சிங்களப் பெண்களை மலடாக்குகின்ற மலட்டு மருத்துவர்கள் இருப்பதாகக் கூறினார்கள்.
2019இல் நாட்டைக் காப்பாற்றிக்கொள்ள மதத்தைப் பாதுகாத்துக்கொள்ள அவரை வெற்றியீட்டச் செய்விக்குமாறு கோட்டாபய கூறினார். சிங்கள மக்கள் முண்டியடித்துக்கொண்டு போய் வாக்குகளைப் போட்டு வெற்றிபெறச் செய்வித்தார்கள். இப்போது அந்த மொட்டு எங்கே? அந்த மொட்டு அரசாங்கம்தான் கொவிட் பெருந்தொற்றுவேளையில் முஸ்லிம்கள் இறந்தால் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்காமல் தகனம் செய்யுமாறு கூறியது. இப்போது அந்த மொட்டின் பெரும்பான்மையினர் ரணிலோடுதான் இருக்கிறார்கள்.
இப்போது மொட்டின் தலைவர் ரணில். ஏனையோர் எவருடன் இருக்கிறார்கள்? மொட்டின் தவிசாளர் ஜீ்.எல். பீரிஸ் உள்ளிட்ட இனவாதத்தை விதைத்தவர்கள் முஸ்லிம் ஜனாஸாக்களை தகனம் செய்யுமாறு தீர்மானிக்கையில் அமைச்சரவையில் இருந்த ஜீ. எல். பீரிஸ், டலஸ் அழகப்பெரும, நாலக்க கொடஹேவா இன்று எங்கே இருக்கிறார்கள்? சஜித் பிரேமதாசவிடம். இனவாதக் கும்பல்கள் எல்லாமே இன்று அவர்களிடமே இருக்கின்றது. அதனால் நீங்கள் ரணிலைப் பார்த்தாலும் மொட்டின் அரைப்பகுதியுடன். சஜித்தைப் பார்த்தாலும் மொட்டின் அரைப்பகுதியுடன். அவர்கள் அனைவருமே இனவாதத்தை விதைத்தவர்கள். அதோ அந்த இனவாதத்தில் வீழ்ந்திடாத, அந்த சேற்றில் அமிழ்ந்துவிடாத ஒரே அரசியல் இயக்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமே. நான் உங்களிடம் கேட்கிறேன் யாரை தெரிவுசெய்யப் போகிறீர்கள்? தெரிவுசெய்ய வேண்டியது தேசிய மக்கள் சக்தியையாகும்.
அங்குமிங்கும் தாவுகின்ற இந்த அரசியலை நிறுத்தவேண்டாமா?
இந்த அரசியலில் ஓர் அசிங்கமான சூதாட்டம் நிலவுகின்றது. அங்குமிங்கும் தாவிக்கொண்டு இருக்கிறார்கள். அங்கும் வாங்கிக்கொள்கிறார்கள். இங்கும் வாங்கிக்கொள்கிறார்கள். இப்போது அதாவுல்லா எந்தப் பக்கத்தில்? அங்குமிங்கும் தாவுகின்ற இந்த அரசியலை நிறுத்தவேண்டாமா? இந்த அசிங்கமான அயோக்கியத்தனமான அரசியல் காரணமாகவே எமது நாடு நாசமாகியது. கடந்த மாதம் ஏசுகிறார்கள். இந்த மாதம் போய் கட்டிப்பிடிக்கிறார்கள். இதனை மாற்றியமைத்திட வேண்டாமா? வேண்டும். இப்போது அந்த கீதா நோனாவைப் பாருங்கள். சென்ற வாரம் ரணில்தான் டொப் எனக் கூறுகிறார். இந்த வாரம் சஜித் தான் டொப் எனக் கூறுகிறார். அவர்களுக்கு வெட்கம் கிடையாது. எடுப்பவர்களுக்கும் வெட்கம் கிடையாது.
வடக்கிற்குச் சென்றும், கிழக்கிற்குச் சென்றும், தெற்கிற்குச் சென்றும் ஒரே கதையைக் கூறுகின்ற ஒரே இயக்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமே.
மகரகம பொதுபல செனையின் மேடையில் ஏறிய சம்பிக்க ரணவக்க இப்போது சஜித்துடன். ரிசாட் பதுருதீனும் சஜித் பிரேமதாசவுடன். சஜித் பிரேமதாச கிழக்கிற்கு வரும்போது ஹக்கீமை அழைத்து வருகிறார், சம்பிக்கவை ஒளித்துவைத்துவிட்டு வருகிறார். மாத்தறைக்குப் போகும்போது ஹக்கீமை ஒளித்துவைத்துவிட்டு சம்பிக்கவை கூட்டிக்கொண்டு போகிறார். மன்னாருக்கு போகும்போது றிசாட் பதுருதீனை கூட்டிக்கொண்டு போகிறார். சம்பிக்கவை ஒளித்துவைத்துவிட்டுப் போகிறார். காலிக்குப்பொகும்போது ரிசாட்டை ஒளித்துவைத்துவிட்ட சம்பிக்கவை கூட்டிக்கொண்டு போகிறார். கொள்கைப்பிடிப்பு இல்லாத அரசியல்வாதி.
இன்று வடக்கிற்குச் சென்றும், கிழக்கிற்குச் சென்றும், தெற்கிற்குச் சென்றும் ஒரே கதையைக் கூறுகின்ற ஒரே இயக்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமே. நாங்கள் இந்த விளையாட்டை மூடிமறைத்து ‘பிளே’ பண்ணவில்லை. அவர்கள் மறைமுகமாகவே விளையாடுகிறார்கள். அவர்களைத் தோற்கடித்திட இந்த அசிங்கமான விளையாட்டே போதும். இவையனைத்தையும் கருத்தில்கொண்டு நாங்கள் செப்டெம்பர் 21ஆம் திகதி நல்லதொரு முடிவினை எடுக்கவேண்டும். அவர்கள் வருவது பகிர்ந்துகொள்வதற்காகவே. சிறப்புரிமைகளைக் கைவிடுகின்ற அரசியல்வாதிகள் இருக்கின்ற ஓர் அரசாங்கத்தை நாங்கள் அமைத்திடுவோம்.
எமது நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டவேண்டும்
இந்த நாட்டில் தூள் வியாபாரம், பாதாள உலகின் பின்னணியில் அரசியல்வாதிகள் இருப்பது உங்களுக்குத் தெரியும். இந்த தேர்தலுக்காக அவர்கள் செலவுசெய்வது தூள் வியாபாரிகளின் பணத்தையாகும். எமது நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டவேண்டும். தூள் வியாபாரத்தை ஒழித்துக்கட்ட வேண்டும். அதோ அந்த வேலையை செய்வது தேசிய மக்கள் சக்தியாகும். இந்த ஆட்சியார்கள் ஒருபோதுமே அதனை செய்யமாட்டார்கள். விரும்பிய எல்லாவற்றையும் வெளிநாடுகளிலிருந்து கொண்டுவந்து இங்கே விற்பனை செய்கின்ற வழிமுறையையே அவர்கள் விரும்புகிறார்கள். அப்போதுதான் ஆட்சியாளர்களக்கு கொமிஸ் கிடைக்கும். ரணிலின் அரசாங்கத்தில் படகுகள் கரையில் குவிந்துள்ளன. மாலைதீவிலிருந்து கருவாடு இறக்குமதி செய்கிறார்கள். மீன்களுக்கு வாக்குரிமை இருந்தால் ரணிலுக்கே வாக்குகள் கிடைக்கும். நாங்கள் இந்த நாட்டில் கடலுக்குச் செல்கின்ற அனைத்து மீனவர்களுக்கும் அவசியமான நிவாரணங்கள் அனைத்தையும் வழங்குவோம்.
இந்தப் பிரதேசத்தில் கடலரிப்பு காரணமாக கரையோரம் உள்நாட்டை நோக்கி வருகின்றது. ஒருசில தென்னந்தோட்டங்கள், கட்டடங்கள் கடலில் அமிழ்ந்துள்ளன. அதனால் இந்த கரையோரத்தை பேணிப் பாதுகாத்து கடலரிப்பினைத் தடுக்க அவசியமான சுற்றாடல் ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டும். அவ்வாறு செய்து பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயமாக அதனை செய்யும். இந்நாட்டின் இளைஞர்கள் தொழிலை தேடிக்கொள்வதென்பது கனவாகும். இயலுமானவர்கள் தொழில் தேடி வெளிநாடு செல்கிறார்கள். நாங்கள் மக்கள் வாழக்கூடிய அழகான ஒரு நாட்டை உருவாக்கிடவேண்டும். அதற்காக செப்டெம்பர் 21ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியை வெற்றியீட்டச் செய்விப்போம்.
நாட்டை சீராக்குகின்ற அரசாங்கமொன்றைக் கட்யெழுப்புவோம். திருட்டுகளை நிறுத்துகின்ற, மக்களின் சொத்துக்களை திருடிய அரசியல்வாதிகுளக்கு தண்டனை வழங்குகின்ற அரசாங்கமொன்றை, திருடிய பொதுமக்களின் சொத்துக்களை பறிமுதல் செய்கின்ற, உண்மையான மக்கள் நேயமுள்ள அரசாங்கமொன்றை நாங்கள் இந்த நாட்டில் கட்டியெழுப்புவோம். செப்டெம்பர் 21ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் வெற்றி நிச்சயமே.