மத்திய அரசாங்கத்தின் ஆளும் கட்சியும் தமிழரசு கட்சியும் இணைந்து வடமாகாண சபையை சீர்குலைக்க முயற்சித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அமைச்சர் றிஷார்ட் பதியுதீன் அவர்களுடைய உறுப்பினர்களை இணைத்த வகையில் வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வர தமிழரசு கட்சி முயற்சித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ஊடகங்களுக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “ஊழல் நிறைந்த ஆட்சி ஒன்றை உருவாக்குவதற்கு தமிழரசு கட்சி முயற்சிக்கின்றது. இது கண்டிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.
இதற்கான முழுமையான கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் வடக்கு மாகாணம் தழுவிய நிலையில் நாளை பூரண ஹர்த்தால் ஒன்று தமிழ் மக்கள் பேரவை சார்பில் முன்னெடுக்கப்பட உள்ளதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.