சீரற்ற காலநிலை காரணமாக சிறுவர்கள் மத்தியில் பல நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக சில பகுதிகளில் அதிகமான குளிரும் வேறு சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் காணப்படுகிறது.
இதுபோன்ற காலநிலை மாற்றங்களின் விளைவாக பல நோய்கள் வேகமாக பரவி வருகின்றன.
குறிப்பாக, குழந்தைகளிடையே இந்த நாட்களில் ஆஸ்துமா மற்றும் வைரஸ் காய்ச்சல் ஆகியவை தீவிரமாக காணப்படுகின்றன.
இது தொடர்பாக விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா மேலும் கூறுகையில்,
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு சுத்தமான தண்ணீர் மற்றும் உணவு கிடைக்க வேண்டும். இல்லையெனில், அவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆஸ்துமா உள்ள குழந்தைகள் உரிய சிகிச்சைகளை முறையாக பெற்றுக்கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள ஒருவர் புகைத்தலில் ஈடுபடுவதால் அவ்வீட்டில் வளரும் சிறுவர்கள் பாதிக்கப்படும் ஆபத்துள்ளது. இந்த நோய் நிலையை சில உணவுப் பொருட்களும் தீவிரமாக்கிவிடும்.
எனவே, உடல் உபாதைகளால் உங்கள் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் விரைவில் சிகிச்சை பெறச் செய்யுங்கள். இதனால் உங்கள் குழந்தைகளின் நோய் நிலைமையையும், வைத்தியசாலையில் குழந்தைகள் அனுமதிக்கப்படுவதையும் குறைத்துக்கொள்ள முடியும் என்று கூறினார்.