சூப்பர் புயல் என்று அழைக்கப்படும் லெகிமா (Lekima) இன்று அதிகாலை 1.45 மணியளவில் சீனாவின் வென்லிங் நகரத்தில் கரையைக் கடந்தது. நொடிக்கு 52 மீட்டர் என்ற வேகத்தில் வீசிய காற்றின் வேகம் காரணமாக கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. கரையை நோக்கி வந்த அலைகள் மிக அதிக உயரத்தில் விசிறியடித்து மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கின.
புயலுக்கு முன்பாகவே சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த காரணத்தால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். இதனால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. சில இடங்களில் புயலைத் தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்தது.
சாலைகளில் சென்ற சில வாகனங்களும், சில மனிதர்களும் காற்றின் வேகத்தில் தூக்கி வீசப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரியான நேரத்தில் எடுக்கப்பட்டிருந்ததால் பெரிய இழப்புகள் ஏதும் இல்லை என வென்லிங் நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.