சீன தூதுவரின் வடக்கிற்கான விஜயம் முக்கியமானதல்ல, அதனை தாண்டி தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளில் அதற்கான தீர்வு விடயத்தில் சீனாவின் கொள்கை என்னவாக உள்ளது என்பதே எமது கேள்வியாகும்.
இனப்பிரச்சினை விடயத்தில் சீனாவின் நிலைப்பாடு எவ் விதமாக உள்ளது என்பதே எமக்கு முக்கியம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்.
இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென் ஹொங்கின் வடக்கு விஜயம் மற்றும் அவரது வடக்கு கண்காணிப்பு செயற்பாடுகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
இலங்கைக்கான எந்தவொரு தூதுவரும் இலங்கையில் எந்தவொரு பிரதேசத்தையும் பார்வையிட முடியும். அதற்கான உரிமை உள்ளது.
ஆனால் எம்மையும் எமது மக்களையும் பொறுத்த வரையில் அவரது விஜயம் முக்கியமானதல்ல. எம்மை பொறுத்தவரையில் அவர்களின் அடிப்படை கொள்கைகள் என்னவாக உள்ளது என்பதே எமது கேள்வியாகும்.
இலங்கையில் அரசியல் பிரச்சினைகள் பலமடைந்துள்ளன. சீனாவோ அல்லது சீனாவின் தூதுவர்களோ இனப்பிரச்சினை குறித்து அரசியல் தலைமைகளை சந்தித்து அதற்கான தீர்வுகளை முன்வைக்கவில்லை.
இதுவரை காலமாக அவ்வாறான முயற்சிகள் முன்னெடுக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கையில் இந்த விஜயம் எமக்கு அர்த்தமற்ற ஒன்றாகவே இருக்க முடியும்.
நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களும் ஒற்றுமையாக, சமத்துவத்தின் அடிப்படையிலும், நீதியின் நியாயத்தின் அடிப்படையில் வாழ வேண்டும் என்பது குறித்து அவர்கள் எதனையும் கூறவில்லை.
யாழ்ப்பணத்திற்கு விஜயம் செய்த சீனத்துவர், அங்கும் அவ்வாறான கருத்துக்களை கூறவில்லை. எனினும் அரசியல் தீர்வு குறித்து முன்னேற்றகரமான கருத்துக்களையே எமது மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதனை சகலரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.
சீன தூதுவரின் வருகையை நாம் எதிர்க்கவில்லை அதே சமயம் இந்த விஜயம் குறிப்பிட்ட ஒரு சில நோக்கங்களுக்காக மட்டுமே அமைந்துள்ளதாக கருதுகின்றோம். இனப்பிரச்சினை விடயத்தில் சீனாவின் நிலைப்பாடு என்ன விதமாக உள்ளது என்பதே எமக்கு முக்கியம்.
இந்த விடயத்தில் மக்கள் சிந்தித்து முடிவெடுப்பார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அரசியல் ரீதியிலான தாக்கங்களை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு எமது மக்கள் இடமளிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்கும் உள்ளது என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]