தமிழ் சினிமாவில், இளைஞர்களின் கனவு தேவதையாக வலம் வருபவர்,ஹன்சிகா. தன் நடிப்பில், பொங்கல் வெளியீடாக வர உள்ள குலேபகாவலி படம் பற்றி நம்மிடம் பேசுகிறார், ஹன்சிகா.
குலேபகாவலி படம் பற்றி ?
இந்த படத்தின் கதைக்களம், 1945ம் ஆண்டில் துவங்குகிறது. அப்போது ஒரு புதையல் கிடைக்கிறது. அதை எடுக்க, சிலர் முயற்சிக்கின்றனர். அந்த புதையல் யாருக்கு கிடைக்கிறது என்பதை, காமெடியாகவும், சுவாரசியமாகவும், இந்த படம் விளக்குகிறது.
இந்த படத்தில் உங்க, ‘ரோல்’ என்ன?
சிலை திருடும் கும்பலைச் சேர்ந்தவராக, பிரபுதேவா நடித்துள்ளார். முதல் முறையாக, நானும் திருட்டு ரோலில் நடித்து உள்ளேன். இயக்குனர் கல்யாண் கதை சொல்லும்போதே, இது நமக்கு செட்டாகுமா என, பயந்தேன். ஆனால், இயக்குனர் தைரியம் கொடுத்து, நடிக்க வைத்தார்.
இயக்குனர் பிரபுதேவா – ஹீரோ பிரபுதேவா, என்ன வித்தியாசம்?
இயக்குனர் பிரபுதேவா, படப்பிடிப்பில், எப்போதும் டென்ஷனாகவும், பரபரப்பாகவும் இருப்பார். ஹீரோ பிரபுதேவா, ஒரு ஜாலியான மனிதர். எப்போதும் கல கலப்பாக இருப்பார். அவருக்கு ஜோடியாக நடித்தது, மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்.
தமிழில் சரளமாக பேசுவதற்கு, இன்னும் தடுமாறுகிறீர்களே?
என் உதவியாளர்களிடம் தமிழில் தான், பேசி பழகுகிறேன். முன்பை விட, இப்போது ஓரளவுக்கு நன்றாக பேசுவதாக நினைக்கிறேன். கூடிய விரைவில்,சரளமாக தமிழ் பேசுவேன். நீங்கள்
உறுதியாக நம்பலாம்.
கதையை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?
முதலில், படத்தின் கதை எனக்கு பிடிக்க வேண்டும். ஓரளவுக்காவது, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும். கதைக்களம் வித்தியாசமாக இருக்க வேண்டும். இதெல்லாம் சரியாக அமைந்தால், படத்தில் நடிப்பதற்கு உடனடியாக சம்மதம் தெரிவித்து விடுவேன்.
இந்த படத்தில் சண்டை காட்சியில்நடித்துள்ளதாக…
ஆமாம்; ஆனந்த்ராஜுடன் சண்டை காட்சியில் நடித்திருக்கிறேன். நேர்த்தியாக சண்டை போட்டிருக்கிறேன். இந்த படத்துக்காக, கொஞ்சம், ‘ரிஸ்க்’எடுத்துருக்கிறேன்.
காமெடி காட்சிகளில் நடிக்கும்போது, அதிக, ‘டேக்’ வாங்கினீர்களாமே?
மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு போன்றவர்கள், காமெடி பண்ணும்போது, நான் அழ வேண்டும். ஆனால், சிரிப்பை அடக்க முடியாமல், நிறைய, ‘டேக்’ வாங்கினேன். இயக்குனரே டென்ஷனாகி விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.