வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் முல்லைத்தீவுப் பொலிஸாரால் நேற்றுக் கைதுசெய்யப்பட்டு, ஒன்றரை மணித்தியாலங்களின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
நீதிமன்று அவருக்கு ஏற்கனவே முன்பிணை வழங்கியிருந்ததால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த 22 ஆம் திகதி வட்டுவாகல் கோட்டபாஜ கடற்படை முகாம் காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. அதன்போது அரச சொத்துக்களைச் சேதமாக்கியமை உட்படப் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சிவாஜிலிங்கத்துக்கு எதிராக முல்லைத்தீவு பொலிஸார் முறைப்பாடு பதிவு செய்தனர்.
கடந்த 27 ஆம் திகதி அது பற்றிய விசாரணைக்கு வருமாறு பொலிஸார் அழைத்திருந்தனர். அன்று வடக்கு மாகாண சபை அமர்வு காரணமாக பொலிஸ் நிலையத்துக்குச் சிவாஜிலிங்கம் செல்லவில்லை.
அவர் சார்பாக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முற்பட்ட சட்டத்தரணிகள் முன்பிணை விண்ணப்பம் செய்தனர். விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்று அது பற்றிய விசாரணைக்காக வழக்கைக் கடந்த மார்ச் மாதம் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைத்திருந்தது.6ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு வந்தது. வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஜெனீவா சென்றிருந்தார். அவர் சார்பாக முற்பட்ட சட்டத்தரணிகளான எஸ்.எச்.எம்.மனாறுதீன், ஆ.முகம்மது பாறுக் ஜனாப் ஹறீஸ் ஆகியோர் முன்பிணை தொடர்பில் வாதிட்டனர்.
“என் சார்பாக மன்றில் முற்பட்ட சட்டத்தரணிகள் இந்திய உச்சநீதிமன்றின் பிரபல சட்டத்தரணி ராம்கெத்மலானி, தமிழக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு முன்பிணை கோரி வாதாடியபோது முன்வைக்கப்பட்ட வாதங்களைச் சுட்டிக்காட்டியதோடு, இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாஜ ராஜபக்ஸவுக்கு முன்பிணைகோரியபோது முன்வைத்த விடயங்களையும் சுட்டிக்காட்டினர். அதனையடுத்து முன்பிணை நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது” என்று மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
அதனையடுத்து தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இருவரது ஆள்பிணையில் செல்ல முன்பிணை வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு சிவாஜிலிங்கம் நேற்றுச் சென்றிருந்தார்.
“சிவாஜிலிங்கத்தைக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியிருந்தோம். பிணையாளிகளை உறுதிப்படுத்திய பின்னர் விடுவித்தோம்” என்று பொலிஸா் தெரிவித்தனர்.
“என்னை சுமார் ஒன்றரை மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தினர். இதுதான் தமது நடைமுறை என்று பொலிஸார் கூறினர். வடக்கு மாகாணத்திலே முதலாவது முன்பிணை எனக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு சட்டத்தைநாடி முன்பிணை கோராவிட்டால் குறைந்தது ஆறு மாதங்கள் நான் வெளியில் வரமுடியாதவாறு சட்டப்பிரிவுகளின் கீழ் என்னைக் கைதுசெய்திருப்பார்கள். முன்பிணை வழங்கியிருந்ததன் காரணத்தால் நான் வெளியில் இருந்து கொண்டு இந்த வழக்கைச் சந்திக்கக்கூடியதாக உள்ளது“ என்று சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்றில் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் மீதான வழக்கை நீதிமன்று எதிர்வரும் 2ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
ஆர்ப்பாட்டம் தொடர்பிலான இந்த வழக்கில் மொத்தமாக 7பேர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இன்னும் மூன்று பேரை தேடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களும் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர்தான் வழக்கு விசாரணைகள் ஆரம்பமாகும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.