அண்மையில் இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற நவராத்திரி தின நிகழ்வுகளில், இந்திய அரசின் முக்கியஸ்தர் சுப்பிரமணியன் சுவாமி கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது மனைவியுடன் இணைந்து, திருநீறு அணிந்து சந்தனப் பொட்டும் இட்டுக்கொண்டார். அதேபோல சில நாட்களின் முன்னர். இந்தியாவுக்கு வருகை தந்த நாமல் ராஜபக்ச இந்தியப் பிரதமருக்கு சிங்களத்தில் மொழிபெயர்த்த ‘பகவத் கீதை’ ஒன்றை வழங்குகின்ற காட்சியும், இலங்கை இந்திய ஊடகங்களில் காணக்கிடைத்தது. ‘படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில்’ என்பார்கள். அப்படித்தான் இலங்கை அரசு இரு முகங்களைக் காட்டி வருகிறது. இலங்கையில் சைவ சமயம் மீதான போர் சத்தமின்றி இரத்தமின்றி நடக்கிறது.
ஈழத்தை சிவபூமி என்று அழைத்தவர் திருமூலர். 5-ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலர் இயற்றிய திருமந்திரம், தமிழின் இந்து மத்தின் முதுபெரும் தத்துவச் சொத்து ஆகும். இந்த நிலையில் இன்றைய இலங்கையை அன்றைய – என்றைக்குமான ஈழத்தை சிவபூமி என்று அவர் அழைத்தமை, இந்தத் தீவின் தனிப் பெரும் சிறப்பாகும். ஈழத்தின் 4 புறமும் பெரும் சிவாலயங்கள் காணப்படுகின்றன. அவற்றை ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்கள் என்று அழைப்போம். வடக்கே நகுலேச்சரம், வடமேற்கே திருக்கேதீச்சரம், கிழக்கே திருக்கோணேச்சரம், மேற்கே முன்னேஸ்வரம், தெற்கே தொண்டீச்சரம் என்ற பஞ்ச ஈச்சரங்கள் ஈழத்தின் தனிப் பெரும் அடையாளங்கள் ஆகும்.
ஈழம் சைவ பூமி என்பதற்கும் ஈழத் தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள் என்பதற்கும் இத்தலங்கள் பெரும் தொன்மைச் சான்றுகளாக உள்ளன. அத்துடன் 6-ம், 7-ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சம்பந்தர் மற்றும் சுந்தரமூர்த்தி நாயன்மார்களும் ஈழத் திருத்தலங்கள் பற்றிய பதிகங்களைப் பாடியுள்ளனர். அதேபோல, சோழர் காலத்திலும் தமிழகத்தைப் போலவே ஈழத்திலும் சைவம் தழைத்தோங்கியது. 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதரும் கதிர்காமம் மீதும் திருப்புகழ் பாடல்களைப் பாடியிருப்பதும் ஈழம் ஒரு சிவபூமி என்பதற்கான வலுச்சான்றுகளாகும்.
ஈழத்தில் கோயில்களில் நடந்த இனப்படுகொலைகளின் பட்டியல்களும் உண்டு. போரின்போது மக்கள் தஞ்சமடையும்போதெல்லாம் அந்தக் கோயில்கள்மீது எறிகணைத் தாக்குதல்களும் விமானத் தாக்குதல்களும் நடாத்தப்பட்டு, மக்களுடன் தெய்வங்களும் இனவழிப்பு செய்யப்பட்டனர். உண்மையில் ஈழத் தமிழ் மக்கள் தமிழர்கள் என்பதற்காக மாத்திரம் இனப்படுகொலை செய்யப்படவில்லை. சைவர்கள் என்பதற்காகவும் இந்துக்கள் என்பதற்காகவுமே இனப்படுகொலை செய்யப்பட்டோம். தேவாரமும் திருப்பாசுரங்களும் முழங்கும் எங்கள் ஆலயங்களின் தெருக்களில் எல்லாம் குருதி தெறித்துப் பாய்ந்தது.
நாங்கள் மூட்டை முடிச்சுகளுடன் இடம்பெயர்கின்றபோது, எங்கள் தெய்வங்களும் இடம்பெயர்ந்த சோகங்களும் நடந்தன. எங்கள் வீடுகள் நகரங்களுடன் ஆலயங்களும் இடித்தழிக்கப்பட்டன. இதுவெல்லாம் முள்ளிவாய்க்காலுடன் முடிந்துவிட்டதா? இல்லையே. முள்ளிவாய்க்காலுடன் இனவழிப்பு முடியவில்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அந்த அளவுக்கு எங்கள் ஆலயங்கள்மீதான ஆக்கிரமிப்புக்கு இன்னமும் முடியவில்லை. சத்தம் இல்லாமல் இரத்தம் இல்லாமல் தமிழர்களின் தொன்மை இடங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன.
முள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய இன்றைய காலகட்டத்தில், 3 வழிமுறைகளில் நிலம் மற்றும் மத ஆக்கிரமிப்பு தொடர்கின்றது. இராணுவத்தினர் தமிழர்களின் நிலங்களில் புத்தர் சிலைகளையும் விகாரைகளையும் திணித்து, எம் மண்ணில் அதை நிறுவி சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். பல இடங்களில் குடியேற்றங்களும் நடந்துள்ளன. அடுத்து, சிங்கள இனவாத பிக்குகள் தமிழர்களின் பிரதேசங்களில் வந்து விகாரைகளை அமைத்து ஆக்கிரமிப்பு செய்து வருகிறார்கள்.
இன்னொரு புறத்தில் தமிழ் மக்களின் நிலங்களை சிங்களவர்கள் ஆக்கிரமித்து, அங்கே புத்தர் சிலைகளையும் விகாரைகளையும் நிறுவி ஈழ மண்ணின் அடையாளத்தை அழிக்க முயல்கின்றனர். தமிழர்களின் எல்லைக் கிராமங்கள் ஒவ்வொரு நிமிடமும் பறிபோய்க்கொண்டிருக்கின்றன. நாங்கள் உறங்கும்போதும் எங்கள் நிலம் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்படுகிறது. வயல்கள், குளங்கள், கடல் என பொருளாதார மையப் பகுதிகள்மீது திட்டமிட்ட வகையில் ஆக்கிரமிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் தமிழர்கள் வாழ்விடத்தை மாத்திரமின்றி வாழ்வாதாரத்தையும் இழக்கிறார்கள்.
1996-ல் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமிக்கும் யுத்தம் நடந்த வேளையில், யாழ்ப்பாணம் கொக்குவில் நந்தாவில் அம்மன் ஆலயத்தில் உயிர் காக்க தஞ்சம் புகுந்த மக்கள்மீது நடத்திய விமானத் தாக்குதலில் நுற்றுக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அம்மனின் முன்னால் கொன்று வீசப்பட்ட மனிதர்களும் சதைப் பிண்டங்களும் ஓடும் குருதியும் காணப்பட்டது. வரலாற்றில் இப்படி எல்லாம் நடந்து முடிந்த நிலையில், இப்போதும் சிங்களவர்களும் பிக்குகளும் இராணுவத்தினரும் தமிழர்களின் நிலங்களையும் ஆலயங்களையும் ஆக்கிரமிக்க முயல்கின்றனர். அதேபோல இந்த ஆக்கிரமிப்பை ஸ்ரீலங்கா அரசு தனது தொல்லியல் திணைக்களம் வாயிலாக வலுப்படுத்தி வருகின்றது.
இந்தியாவுக்குப் பூங்கொத்துக்களைக் கொடுத்துவிட்டு, பகவத் கீதையைப் பரிசளித்துவிட்டு ஈழத்தில் இந்து – சைவ ஆலயங்கள்மீது இப்படிப் போரைத் தொடர்வதுதான் ராஜபக்சேக்களின் தந்திரம்.
தமிழர்களின் நிலங்களையும் அவர்களின் ஆலயத் தொன்மை சான்றுகளையும் இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் பேரினவாத பிக்குகளும் இணைந்து ஆக்கிரமித்து அழித்து வருகின்றனர். சத்தம் இல்லாமல் இரத்தம் இல்லாமல் இந்தப் போர் நடந்துகொண்டிருக்கிறது. சிவபூமியை சிங்கள பூமியாக்கிவிட வேண்டும் என்ற வெறியில், ஈழத்தில் இருந்து சைவத்தை அழித்துவிட வேண்டும் என்ற வெறியில் சைவம் மீதான திட்டமிட்ட போர் கச்சிதமாக நடக்கிறது. இந்தியாவுக்குப் பூங்கொத்துகளைக் கொடுத்துவிட்டு, பகவத் கீதையைப் பரிசளித்துவிட்டு ஈழத்தில் இந்து – சைவ ஆலயங்கள்மீது இப்படிப் போரைத் தொடர்வதுதான் ராஜபக்சேக்களின் தந்திரம்.
கட்டுரையாளர்: ஈழக் கவிஞர், ஊடகவியலாளர்
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]