சந்திரயான்-3 லேண்டர் தரை இறங்கிய சிவசக்தியை தலைநகரமாக கொண்டு இந்து நாட்டை நிலவில் இந்தியா உருவாக்க வேண்டும் என அகில இந்திய இந்து மகாசபை தேசிய தலைவர் சுவாமி சக்ரபாணி மகாராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
நிலவை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் கடந்த 23-ந்தேதி மாலை 6.04 மணிக்கு அந்த விண்கலத்தில் இருந்து பிரிந்து விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கி சாதனை புரிந்தது. இதனையடுத்து இஸ்ரோ மையத்திற்கு சென்று விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்த மோடி, சந்திரயான்-3 தரையிறங்கிய நிலவில் உள்ள இடம் இனி ‘சிவசக்தி என்று அழைக்கப்படும் என அறிவித்தார். சந்திரயான் 3 லேண்டர் நிலவில் கால்பதித்த ஆகஸ்ட் 23ம் தேதி இனி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும் எனவும் மோடி தெரிவித்தார்
இந்த நிலையில் அகில இந்திய இந்து மகாசபை தேசிய தலைவர் சுவாமி சக்ரபாணி மகாராஜ், பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:
சந்திரயான்-3 வெற்றிகரமாக தரை இறங்கிய இடத்துக்கு சிவசக்தி என பெயர் சூட்டியதற்கு நன்றி. மற்ற நாட்டினர் நிலவை உரிமை கொண்டாடுவதற்கு முன்பு நிலவின் மீது இந்திய அரசு தனது உரிமையை நிலை நாட்ட வேண்டும். மற்றவர்கள் அங்கு சென்றடையா வண்ணம் இந்திய அரசு விரைவாக செயல்பட்டு அதற்கான தீர்மானத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.
சந்திரயான்-3 லேண்டர் தரை இறங்கிய சிவசக்தியை தலைநகரமாக கொண்டு இந்து நாட்டை நிலவில் இந்தியா உருவாக்க வேண்டும். நிலவை இந்து சனாதன ராஷ்டிரா என்று அறிவிக்க வேண்டும்.”
இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அவரது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.