சிவகார்த்திகேயன் புகார் மீது விரைவு நடவடிக்கை: விஷால் உறுதி
சிவகார்த்திகேயன் அளித்துள்ள புகாரில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் சங்கச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.
‘ரெமோ’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பை முன்னிட்டு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் “‘ரெமோ’ வெளியாகும் வரை பிரச்சினை. எவ்வளவு தான் பிரச்சினைக் கொடுப்பீர்கள். எவ்வளவு கொடுத்திருக்கிறீர்கள் என்று உங்களுக்கே தெரியும். நீண்ட நாட்களாக கஷ்டப்பட்டு வருகிறேன்.
நானோ ராஜாவோ சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து படம் எடுக்க வரவில்லை. ரசிகர்கள் ரசிப்பதற்காக மட்டுமே படம் எடுக்க வருகிறோம். அதற்கு வேலை செய்ய விடுங்கள். கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், என்னையும் அவரையும் வேலை செய்ய விடுங்கள். நினைத்திருந்தால் நிறைய சம்பாதித்து எங்கேயாவது சென்று செட்டிலாகி இருக்கலாம்.” என்று கண் கலங்கினார்.
சிவகார்த்திகேயன் கண்ணீர் மல்கிய பேச்சு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. சிம்பு மற்றும் மனோபாலா ஆகியோர் ட்விட்டர் தளத்திலேயே தங்களுடைய ஆதரவை சிவகார்த்திகேயனுக்கு தெரிவித்தனர்.
சிவகார்த்திகேயன் பிரச்சினைக் குறித்து காஞ்சிபுரத்தில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், “சிவகார்த்திகேயன் மட்டுமல்ல, நானும் ஒரு காலத்தில் கட்ட பஞ்சாயத்தால் பாதிக்கப்பட்டேன். சிவகார்த்திகேயன் அளித்திருக்கும் புகாரில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஊழல் புகாருக்கு எதிரான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
விஷாலின் பேச்சால், சிவகார்த்திகேயன் நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.