மலையக சிறுமி இஷாலினிக்கு ஏற்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்கவேண்டும். எதிர்காலத்திலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையே மேற்கொள்ளவேண்டும். அதன் சட்டங்களிலும் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
மாறாக சம்பவம் ஒன்று இடம்பெற்ற பின்னர் அதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதன் மூலம் இதனை தடுக்க முடியாது என நீதிக்கான பெண்கள் அமைப்பு தெரிவித்தது.
சிறுவர்கள் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அதன் செயலாளர் சர்மிலா கோணவல தெரிவிக்கையில்,
நாட்டின் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக செயற்படவேண்டிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு பாரிய பொறுப்புக்கள் இருக்கின்றன. சிறுவர் துஷ்பிரயோகம் வன்முறைகள் தொடர்பில் தெரிவிக்கப்படும் முறைப்பாடுகளை பதிவு செய்துவிட்டு மாத்திரம் இருக்கமுடிாது.
சிறுவர்கள் இவ்வாறான சம்பவங்களுக்கு முகம்கொடுக்காமல் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவேண்டும். கடந்த ஒரு மாதத்துக்குள் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான 17 ஆயிரத்துக்கும் அதிகமான படங்கள் சமூக வலைத்தளங்களில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டிய அதிகாரிகள் ஏன் செயற்படாமல் இருக்கின்றார்கள் என்பதுதான் எமக்குரிய கேள்வியாகும்.
அத்துடன் யாரேனும் சிறுவர் துஷ்பிரயோகத்துக்கோ அல்லது வேறு வன்முறைகளுக்கோ ஆளானால் அதுதொடர்பில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் என்ன? அதற்கான சட்ட வரைபுகள் எமது அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. அப்படியாயின் ஏன் அதனை செயற்படுத்தாமல் இருக்கின்றோம். பாடசாலைகளுக்கு சிறுவர் மனநல ஆலாேசனை அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். பிரதேச செயலகங்கள் ஊடாக சிறுவர் அபிவிருத்தி அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் ஏன் செயற்படாமல் இருக்கின்றனர்?
மேலும் பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் பெற்றோர்களுக்கும் பாரிய பொறுப்பு இருக்கின்றது. தனது பிள்ளை தன் தந்தையால், உறவினரால் அல்லது அயலவரால் துஷ்பிரயோகத்துக்கு அல்லது தொந்தரவுகளுக்கு ஆளானால், குடும்பத்துக்குள் பிரச்சினை வரும் என அச்சத்தில் அதுதொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்வதில்லை. இவ்வாறு தயங்குவதால்தான் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.
விசேடமாக மலையகத்தைச்சேர்ந்த சிறுவர்களே அதிகமாக பல்வேறு வன்முறைகளுக்கு உட்பட்டு வருகின்றனர். இதற்கு சமூக மற்றும் பொருளாதார பிரச்சினையும் காரணமாகும். அந்த மக்களின் வாழ்வாதாரம். பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் பின்தங்கிய நிலையே இருக்கின்றது. இதற்கு அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்துக்கின்ற அரசியல் தலைவர்களும் பொறுப்புக்கூற வேண்டும். அந்த மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிவிட்டு பாராளுமன்றம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவாகும் இவர்கள் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் அந்த மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
இதனால் பாதிக்கப்படும் குடும்பத்தினர் தங்கள் பிள்ளைகளை காெழும்பு மற்றும் வேறு நகர பிரதேசங்களில் வீடுகளுக்கு வேலைக்கு அனுப்பி, தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்கின்றனர். இவ்வாறான சிறுவர்களே அதிகமாக துஷ்பிரயோகங்களுக்கும் வன்முறைகளுக்கும் ஆளாகின்றனர். அதனால் மலையகத்தில் இந்த நிலைமையை மாற்றியமைக்க மலையக அரசியல்வாதிகள் முன்வரவேண்டும். அவ்வாறு இல்லாமல் ஏதாவது சம்பவம் ஒன்று இடம்பெறற பின்னர் அதற்கு எதிராக போராட்டங்களை செய்வதால் மாத்திரம் இதனை நிறுத்த முடியாது. மலையக சிறுமி இஷாலினிக்கு ஏற்பட்ட சம்பவத்துக்காக அனைவரும் குரல் எழுப்புகின்றனர். அந்த சிறுமிக்கு நீதி கிடைக்கவேண்டும். ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கே நாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.