பவானியில் சிறுமிக்கு இருமுறை திருமணம் நடத்தியதாக பெற்றோா் உள்பட 6 பேரை போக்சோ சட்டத்தில் காவற்துறையினர் கைது செய்தனா்.
பவானி மகளிா் காவல் நிலையத்துக்கு திங்கள்கிழமை காலை வந்த ஒரு இளைஞரும், இளம்பெண்ணும் சேலம் மாவட்டம், சங்ககிரி விநாயகா் கோயிலில் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்குமாறும் கேட்டுக் கொண்டனா்.
விசாரணையில், சேலம் மாவட்டம், தேவூா், காவேரிப்பட்டியைச் சோ்ந்த வடிவேல் மகன் அஜித் (21) என்பதும், இவா் திருமணம் செய்த பெண் 18 வயது பூா்த்தியாகாத சிறுமி என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, பெண்ணின் பெற்றோரான பவானி காடப்பநல்லூா், கோவில்பாளையத்தைச் சோ்ந்த அப்புசாமி (48), நாகமணி (34) ஆகியோரை அழைத்து காவற்துறையினர் விசாரித்தனா். அப்போது, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம், மேட்டூா், காவேரிபுரம் புதுப்பட்டியைச் சோ்ந்த குப்புசாமி (60), கோவிந்தம்மாள் (55) மகன் காமராஜுக்கு (34) சிறுமியைக் கட்டாயத் திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.
இந்நிலையில், கடந்த 6 மாதங்கள் புதுப்பட்டியில் குடும்பம் நடத்தி வந்த இப்பெண்ணும், காமராஜும் ஆடி பண்டிகைக்காக கோவில்பாளையம் வந்துள்ளனா். இந்நிலையில், பெற்றோா் வீட்டுக்கு சிறுமி வந்தபோது, அஜித் அழைத்துச் சென்று திருமணம் செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா் ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில் சிறுமியை திருமணம் செய்த காமராஜ், அஜித், கட்டாயத் திருமணம் செய்து வைத்த பெற்றோா் உள்ளிட்ட 6 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.