நாட்டில் பெரும்பான்மைச் சமூகம் தவறிழைப்பதாலேயே சிறுபான்மைச் சமூகங்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர் என ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழுப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“13ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கு உரித்துடைய அனைத்து அதிகாரங்களையும் பகிர்ந்தளிக்க வேண்டும் இதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பூரண ஆதரவளிக்கும்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு வரும் நிலையில் அதன் செயற்பாடுகளைக் குழப்பும் நடவடிக்கைகளில் சிலர் முன்னின்று செயற்படுகின்றனர்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் விருப்பு வாக்குமுறைமை இல்லை. அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலிலும் விருப்பு வாக்குமுறைமையை இல்லாதொழிக்கவேண்டும்.
மலையகத்தவர்களையும் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ளவர்களையும் புறக்கணிக்காது அவர்களுக்கான அதிகாரங்களை வழங்குவதன் மூலம் நாட்டில் நல்லாட்சியினை ஏற்படுத்த முடியும்” என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.