இன்றைய காலசூழ்நிலையில் சிறுபாண்மையாக வாழும் முஸ்லிம் சமூகமாகிய எங்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய ஒற்றுமைப்பட்ட முஸ்லிம்கள் கட்சி ஒன்றே இன்றைய காலத்தின் தேவையாகும்.இதன் மூலம்தான் எமது உரிமைகளையும்,அபிலாசைகளையும் வென்றெடுக்க முடியும் என உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக கல்முனை மாநகர சபைத் தேர்தலில் பெரியநீலாவணை 2ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும்,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனைத் தொகுதி இணை அமைப்பாளரும் வேட்பாளருமான இஸட்.ஏ.எச்.றஹ்மானுக்கான கிளை திறப்பு விழாவும்,பொதுக் கூட்டமும் வியாழக்கிழமை(18-01-2018)மாலை பெரியநீலாவணை வீ.சி வீதியில் நடைபெற்றது இங்கு பிரதம அதிதியாக் கலந்து கொண்டு கிளையைத் திறந்து வைத்து உரையாற்றி போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வேட்பாளர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்முனைத் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இணை அமைப்பாளர் எம்.எச்.எம்.பஸீர்,வேட்பாளர்களான ஏ.சி.எம்.அனஸ்,பி.சர்மில் ஜஹான்,நஸ்றுல் இஸ்லாம் ஆகியோருடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களும், கல்முனை விகாராதிபதி சங்கரத்ன ஹிமி தேரர் உள்ளீட்ட பெரும் அளவிலான ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
இங்கு அமைச்சர் பைஸர் முஸ்தபா மேலும் உரையாற்றுகையில் தெரிவித்தாவது :-முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் ஏனைய கட்சிகளைவிடவும் முஸ்லிம் கட்சிகளே அதிகமாகவுள்ளது.இலங்கையைப் பொறுத்தமட்டில் சாதாரணமாக இருக்கும் பெரிய மற்றும் சிறிய கட்சிகள் அனைத்திலும் பார்க்க கிழக்கில் உள்ள முஸ்லிம் கட்சிகள் அதிகமாகவுள்ளது.
இதற்குக் காரணம் மக்களின் உரிமைகள் மற்றும் அபிலாசைகளை வென்றெடுக்கும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட கட்சிகளல்ல.இவை அனைத்தும் தலைமைத்துவ ஆசையினாலும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சையும்அதனோடு கூடிய ஆடம்பர வாழ்க்கையையும் அனுபவிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்திலேயே தங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
ஒவ்வொரு முஸ்லிம் கட்சிகளும் அது முஸ்லிம் காங்கிரஸாக இருந்தாலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸாக இருந்தாலும் ஏனைய பெரும்பாண்மைக் கட்சிகளாக இருந்தாலும் அனைத்திற்கும் இந்தக் கல்முனை மாநகரம்தான் மையமாக இருக்கிறது.காரணம் சாய்ந்தமருதுக்கான நகரசபை,கல்முனைக்கான மாநகரசபை, மருதமுனைக்ககான தனியான நகரசபை என்ற கோசங்கள் அரசியல்வாதிகளின் தேர்தலுக்கான பேசுபொருளாக அமைந்துள்ளது.
என்னிடம் சாய்ந்தமருதுக்கான தனியான நகரசபை அனுமதிக்காக வந்த போது அவற்றை அமைப்பதற்கான சரியான சட்டங்கள் அதற்கான அனைத்து சிக்கல்களையும் தீர்த்து சீர்செய்யப்பட்டு கல்முனையிலிருந்து சாய்ந்தமருதைப் பிரிப்பதால் வரும் சாதக பாதகங்களுக்கேற்ப அவற்றை சரியான முறையில் பிரித்து எடுப்பதற்கான முயற்சிகளையே நாம் செய்ய வேண்டும்.
எனவே அவற்றை நான் செய்து தருகிறேன் என்று சத்தியதியமிட்டுக் கூறினேன். உண்மையில் அந்த மக்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள்.அதனால் இன்று நான் சாய்ந்தமருதுக்கு சென்று அவர்களுடன் உரையாட முடிந்தது.சாய்ந்தமருதிற்கு செல்லக்கூடிய அரசியல்வாதி என்றால் அது அமைச்சர் பைஸர் முஸ்தபா மட்டுமே என்னும் அளவிற்கு அங்கு நிலைமை மாறியிருக்கிறது.
காரணம் மற்றக் கட்சிகள் சாய்ந்தமருதில் பிரதேசசபை தருகிறோம் என்று கூறிவிட்டு கல்முனையில் நாங்கள் பிரிக்கவிடமாட்டோம் என்று இரட்டை வேடம் போடுவதோடு அதற்கான சாதக பாதக நிலைகளை இவர்கள் கருத்திற் கொள்ளாமல் தேர்தல் ஒன்றையே நோக்காகக் கொண்டுஇயங்குகின்றபோது மக்கள் அரசியல் ரீதியாக ஏமாற்றப்படுவதை அவர்கள் உணர்வதில்லை.
மருதமுனைக்கு நான் வந்தது அரசியல் செய்வதற்காக இல்லை ஆனாலும் கட்சிகள் உங்களிடம் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு அவர்கள் அவ்வளவு யோக்கியர்கள் அல்ல. தேர்தல் காலங்களில் இங்கு வந்து தொப்பியைப் போட்டுக் கொண்டு சாரன் உடுத்துக் கொண்டு பள்ளிகளுக்குச் சென்று நாங்கள் மக்களோடு மக்களாக இருக்கின்றோம் என்று காட்டிக் கொள்கிறார்கள்;.
ஆனால் தலைநகரில் அவர்கள் வாழ்க்கை வேறு. அவர்கள் அங்கு மாளிகைகளில் ஆடம்பரவாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் எவருக்கும் நடிக்கவும் இல்லை பயப்படவுமில்லை.சில அரசியல்வாதிகள் சாய்ந்தமருதிற்குச் சென்றால் அங்குள்ள மக்கள் அடிப்பார்கள் என்றார்கள் ஆனால் நாங்கள் தைரியமாகச் சென்றோம் காரணம் அவர்களிடம் நாங்கள் ஹக்கைக் கூறினோம்.
அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் நாங்கள் பயப்படமாட்டோம்.
கொழும்பு கிரேண்ட்பாஸ்,அளுத்கமை,காலி ஜிந்தோட்டை போன்ற பிரச்சினைகளின்போது நாங்கள் அங்கு நேரடியாகச் சென்று பிரச்சினைகளுக்கான தீர்வினை உடன் பெற்றோம்.யாருக்கும் நாங்கள் பயப்படவில்லை ஆனால் இங்குள்ள அரசியல்வாதிகள் போட்டோ எடுப்பதற்றும் பேஸ்புகக்கில் போட்டு விளம்பரம் செய்வதற்குமே அங்கு வந்தார்கள்.
இவர்களின் அரசியல் மக்களுக்கான உரிமைகளை வெல்லப்போகிறதா? நிச்சயமாக இல்லை.எனது தமிழ் பேச்சில் பிழை இருக்கலாம் ஆனால் மனசில் எந்தக் குற்றமும் இல்லை ஆனால் இங்குள்ள நன்றாக தமிழ் பேசும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் தமிழ்ப் பேச்சில் தவறேதும் இல்லை ஆனால் அவர்கள் மனதில் கசடோடு இருக்கிறார்கள்.
எனவே அன்புள்ளவர்களே நீங்கள் நேர்மையான நமக்கான உரிமைகளை பெற்றுத்தரக்கூடிய தலைமைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் அதற்கான தேர்தல்தான் இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்.அதை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தி சரியானவர்களை தெரிவுசெய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.