இன்றைய திகதியில் எம்மில் பலரும் தங்களது பாரம்பரிய உணவு முறையையும், வாழ்க்கை நடைமுறையையும் மாற்றியமைத்துக் கொண்டதால் பல்வேறு வகையினதான உடலியக்கக் கோளாறுகள் ஏற்படுகின்றன.
இதில் சிலருக்கு சிறுநீரகத்தில் உள்ள குளோமருலி எனப்படும் சிறுநீர் வடிக்கட்டிகளில் வீக்கம் ஏற்பட்டு, அதன் காரணமாக சிறுநீரக செயல்பாட்டில் இடையூறு ஏற்படுகிறது. இதற்கு தற்போது நவீன சிகிச்சை முறை கண்டறியப்பட்டிருக்கிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
நீங்கள் வெளியேற்றும் சிறுநீரின் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ…, அதிலிருந்து புரதச்சத்து வெளியேறினாலோ… அல்லது உங்களுடைய முகம், கை, கால், அடிவயிறு ஆகிய பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டாலோ உங்களுக்கு தற்காலிகமான அல்லது நிரந்தரமான குளோமெருலோனெப்ரிடீஸ் என்ற பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும்.
இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டிருந்தால் ரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, சிறுநீரகத்தில் உள்ள திசு பரிசோதனை போன்றவற்றை மேற்கொண்டு எம்மாதிரியான பாதிப்பு என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். வேறு சிலருக்கு இமேஜிங் டெஸ்ட் எனப்படும் எக்ஸ்ரே அல்லது சிடி ஸ்கேன் பரிசோதனையும் அவசியப்படலாம்.
பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று காரணமாக இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும். நீரிழிவு மற்றும் உயர் குருதி அழுத்த நோயாளிகள் தங்களின் ரத்த சர்க்கரை அளவையும், ரத்த அழுத்த அளவையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இதனை பின்பற்றாவிட்டால் அவர்களின் சிறுநீரகம் மற்றும் அதன் செயல்பாடு குறிப்பாக அதன் வடிகட்டிகளின் திறன் பாதிக்கப்படும். இதனை உரிய தருணத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு, உயிருக்கு அச்சுறுத்தலை உண்டாக்கும்.
மருத்துவர்கள் இதற்கு டயாலிசிஸ் எனப்படும் சிகிச்சையை பரிந்துரைப்பார்கள். மேலும் இத்தகைய சிகிச்சையின் மூலம் வீக்கம் அடைந்திருக்கும் சிறுநீரக வடிகட்டிகளை கட்டுப்படுத்தி, அதன் செயல்பாட்டை மேம்படுத்துவர். சிலருக்கு இவை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ஏற்படக்கூடும். தற்காலிகமாக என்றால் அதனுடைய சிகிச்சை முறை வேறுபடும். நிரந்தரமாக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்றால், அதற்கு டயாலிசிஸ் பாணியிலான சிகிச்சை முழுமையான நிவாரணத்தை வழங்கும்.
இத்தகைய பாதிப்புள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்கும் போது மருத்துவர்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என பரிந்துரைப்பர். அதனை உறுதியாக கடைப்பிடித்தால், அக்யூட் குளோமெருலோனெப்ரிடீஸ் என்ற பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபடலாம்.
டொக்டர் குரு பாலாஜி
தொகுப்பு அனுஷா.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]