சிறிலங்கா இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின்னர், முதல் முறையாக யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்ட லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இம்மாத தொடக்கத்தில் சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட, லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, பிராந்தியப்படைகளின் தலைமையகங்களுக்கான பயணங்களை ஆரம்பித்துள்ளார்.
முதற்கட்டமாக அவர் நேற்று யாழ்ப்பாணம் சென்று, பலாலியில், 2000 இற்கும் அதிகமான படையினரையும், யாழ். படைகளின் தலைமையகத்தின் கீழ் உள்ள டிவிசன்கள், பிரிகேட்கள், பற்றாலியன்களின் கட்டளை அதிகாரிகளையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, யாழ். படைகளின் தலைமையக தளபதியாக ஒரு ஆண்டுகாலம் பணியாற்றியவராவார்.
அதேவேளை, யாழ். குடாநாட்டில் கபொத சாதாரண தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 193 மாணவர்களுக்கு, சிறப்பு பரிசுகளை வழங்கும் நிகழ்விலும் சிறிலங்கா இராணுவத் தளபதி பங்கேற்றார்.
இந்த நிகழ்வு நேற்று மாலை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.