ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவின் மனித உரிமை பதிவுகள் அடுத்தவாரம் மீளாய்வு செய்யப்படவுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், பூகோள கால மீளாய்வு அமர்வு கடந்த 6ஆம் நாள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.
இதில் சிறிலங்காவின் மனித உரிமைகள் பதிவுகள் குறித்த மீளாய்வு வரும் 15ஆம் நாள் இடம்பெறவுள்ளது.
மூன்றாவது தடவையாக, இடம்பெறவுள்ள இந்த மீளாய்வு நேரலையான இணையத்தில் ஒளிபரப்பப்படும்.
இந்த மீளாய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு சிறிலங்காவின் தேசிய கொள்கைகள், பொரளாதார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான குழு ஜெனிவா செல்லவுள்ளது.
வரும் 15ஆம் நாள் நடைபெறவுள்ள சிறிலங்கா குறித்த மீளாய்வின் போது, சிறிலங்கா அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட தேசிய அறிக்கை, சுதந்திரமான மனித உரிமை நிபுணர்கள், குழுக்கள், சிறப்பு அறிக்கையாளர்கள், மனித உரிமை அமைப்புகள், ஏனைய ஐ.நா அமைப்புகளின் தகவல்களை உள்ளடக்கிய அறிக்கைகள், தேசிய மனித உரிமைகள் நிறுவகங்கள் பிராந்திய அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புர்களை உள்ளடக்கிய ஏனைய பங்காளிர்களின் அறிக்கைகள் என்பனவற்றின் அடிப்படையில் இந்த மீளாய்வு இடம்பெறும்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள், பாதிக்கப்பட்டவர்கள், உறவினர்களுக்கான இழப்பீடு, குற்றமிழைத்தவர்களை நீதியின் முன் கொண்டு வருதல், போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள், பயங்கரவாத தடைச்சட்டம், காணாமல் போனோர் பணியகத்தை நடைமுறைப்படுத்தல், உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்குதல், எல்லா சமூகத்தினருக்கும் சமமான நீதி கிடைப்பதை உறுதிப்படுத்தல், சிறிலங்கா படையினர் மற்றும் காவல்துறையினரின் கண்மூடித்தனமான கைதுகள், சித்திரவதைகள், வன்முறையைத் தூண்டும் வெறுப்புணர்வு பரப்புரைகளுக்கு நடவடிக்கை எடுத்தல்,சிறுபான்மை இன, மதத்தவர்களின் பாதுகாப்பு, பாலியல் வன்முறைகள், சிறுவர் தொழிலாளர் முறையை அகற்றுதல், வாழ்க்கைத் தர உயர்வு, உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக இந்த பூகோள கால மீளாய்வு இடம்பெறவுள்ளது.