ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தனக்கு விசில் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று நடிகர் விஷால் கேட்டுள்ளது, கமலின் ஆதரவைக்கோரித்தான் என்று ஒரு தகவல் உலவ ஆரம்பித்திருக்கிறது.
வரும் டிசம்பர் 21ம் தேதி ஆர்.கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில் நடிகர் விஷால் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
விஷால் போட்டியிட இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு, விஷாலை தேர்தலில் நிறுத்துவதே கமல்தான் என்றும், விஷாலுக்கு ஆதரவாக கமல் பிரச்சாரம் செய்வார் என்றும் தகவல் பரவியது.
இது கமல் தரப்பில் எரிச்சலை ஏற்படுத்தியதாகவும் தகவல் வெளியானது. இது குறித்து பத்திரிகை டாட் காம் இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில், “கமல், ரஜினி உட்ப எவரிடமும் ஆதரவு கேட்க மாட்டேன்” என்று விஷால் இன்று தெரிவித்தார்.
இதற்கிடையே இன்று வேட்புமனு தாக்கல் செய்த விஷால் தனக்கு விசில் சின்னம் ஒதுக்கவேண்டும் என்று கோரியுள்ளார். இதுதான் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த நவம்பர் 7ம் தேதி நடிகர் கமல்ஹாசன், “தவறு செய்வோர் மீது புகார் கொடுக்க.. நியாயத்துக்காக குரல் கொடுக்க..” என்று குறிப்பிட்டு செயலி ஒன்றை அறிமுகப்படுத்தினார். அதை “மய்யம் விசில்” என்றும் குறிப்பிட்டார்.
இதற்கிடையே ஆர்.கே. நகரில் போட்டியிடும் விஷாலுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார் என்ற தகவல் பரபரப்பப்பட்டது. இதை கமல் தரப்பு விரும்பவில்லை என்ற தகவல் வெளியானது.
இதையடுத்து, “கமல், ரஜினி உட்பட எவரிடமும் ஆதரவு கோரப்போவதில்லை” என்று விஷால் அறிவித்தார்.
ஆனால் தற்போது விசில் சின்னத்தைக் கோரியிருப்பதன் மூலம், கமலின் “மய்யம் விசிலை” நினைவுபடுத்தி வாக்காளர்களை கவர நினைக்கிறார் என்ற பேச்சு எழுந்துள்ளது.
ஆனால் கமல் தரப்பில், “விசில் சின்னத்தை கோருவதற்கு, விஷாலுக்கும் இதர வேட்பாளர்களுக்கும் உரிமை உண்டு. தவரி, தனது அரசியல் குறித்து தெளிவான திட்டமிடல்களோடு இருக்கிறார் கமல். ஆர்.கே. நகர் தேர்தலில் எவருக்காவும் பிரச்சாரம் செய்ய அவர் தயாராக இல்லை. சின்ன விசயம் எல்லாம் கமலுக்கு சின்ன (சிறிய) விசயம்” என்கிறார்கள் கமல் தரப்பில்.