Casting : Aravindan Sivagnanam, Narvin Teri, Leelavathi, Prem, DeepaSelvan, Dhanajayan
Directed By : Ranjith Joseph
Music By : NR Ragunandan
Produced By : Sky Magic – Gayatri Ranjith and Bakyalakshmi Talkies – Bakyalakshmi Venkatesh
ஸ்கை மேஜிக் நிறுவனம் சார்பில் காயத்ரி ரஞ்சித் மற்றும் பாக்யலட்சுமி டாக்கீஸ் நிறுவனம் சாப்ரில் பாக்யலட்சுமி வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சினம் கொள்’. ரஞ்சித் ஜோசப் இயக்கியுள்ள இப்படம் போருக்கு பிறகு ஈழ தமிழ் மக்களின் நிலை மற்றும் அவர்களை சுற்றி நடக்கும் அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
வரும் ஜனவரி 14 ஆம் தேதி ’ஈழம் பிளை’ (https://eelamplay.com/ta) என்ற ஒடிடி தளத்தில் வெளியாகும் இப்படம் எப்படி இருக்கிறது, என்பதை பார்ப்போம்.
இலங்கையில் நடந்த இறுதிப்போருக்குப் பிறகு காணாமல் போன லட்சக்கணக்கான தமிழர்களின் நிலை என்ன ஆனது, என்பதே இன்னும் புரியாத புதிராக இருக்கும் நிலையில், பல வருட சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகும் முன்னாள் போராளிகள் சில மாதங்களில் மாயமான முறையில் உயிரிழக்கும் அதிர்ச்சி தகவலை உரக்க சொல்வதோடு, தமிழர்களின் சொத்துக்களையும், நிலங்களையும் அபகரித்துக்கொண்ட இலங்கை ராணுவம், அவர்களை சொந்த நாட்டில் எப்படி அகதிகளாக நடத்துகிறார்கள் என்பதையும் உலகிற்கு சொல்லும் ஒரு முயற்சியாக இப்படம் உருவாகியுள்ளது.
பல வருட சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகும் முன்னாள் போராளியான அரவிந்தன் சிவஞானம், தனது மனைவியை தேடி அலைகிறார். அப்போது அவரது வீடு மற்றும் நிலங்களை ராணுவம் அபகரித்துக்கொள்ள, இருக்க இடம் இல்லாமல் சுற்றி அலைபவருக்கு அவருடைய போராளி நண்பர்கள் சிலர் ஆதரவு அளிக்கிறார்கள். அவர்களின் உதவியோடு தனது மனைவி மற்றும் மகளை கண்டுபிடிக்கும் அரவிந்தன், அவர்களோடு சந்தோஷமாக வாழும் நிலையில், அவரை சுற்றி மிகப்பெரிய சதி ஒன்று நடக்க, அதில் இருந்து அவர் தப்பித்தாரா இல்லையா, என்பதை தற்போதைய ஈழ மக்களின் இன்னல்கள் நிறைந்த வாழ்க்கை பின்னணியில், ஒரு முழுமையாக ஜனரஞ்சகமான திரைப்பட பாணியில் சொல்லியிருப்பதே ‘சினம் கொள்’.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அரவிந்தன் சிவஞானம், படத்தின் ஆரம்பத்தில் தமிழர்களின் அவலங்களையும், அவர்களின் ஏக்கங்களையும் தனது பார்வை மூலமாகவே வெளிப்படுத்துகிறவர், தனது குடும்பத்தை தேடி அலைவது, மனைவி, மகள் கிடைத்தவுடன் அவர்களுடனான மகிழ்ச்சியான வாழ்க்கை என்று சாமானியனின் வாழ்க்கையை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். இரண்டாம் பாதியில், தன்னை சுற்றி நடக்கும் சதியில் இருந்து மீள்வதற்காக தனது போராளி குணத்தை வெளிக்காட்டும் காட்சிகளில் நடிப்பில் கம்பீரம் தெரிகிறது.
அரவிந்தனின் மனைவியாக நடித்திருக்கும் நர்வினி டெரி, கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, கணவனை இழந்து தவிக்கும் ஈழ பெண்களின் அவல குரலாக ஒலிக்கிறார்.
யாழினி வேடத்தில் நடித்திருக்கும் லீலாவதி, பிரேம், தீபச்செல்வன், வெளிநாட்டு வாழ் தமிழராக நடித்திருக்கும் தனசெயன், பாலா உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
எம்.ஆர்.பழனிகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. கதைக்கு ஏற்றவாறு கேமரா பயணித்திருந்தாலும், பல இடங்களில் எளிமையான காட்சிகளை கூட பிரமாண்டமாக காட்டி நம்மை ரசிக்க வைக்கிறார்.
என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்டு மகிழும் ரகமாக இருப்பதோடு, சிந்திக்கவும் வைக்கிறது. பின்னணி இசையும், பின்னணி இசையாக ஒலிக்கும் பாடல் வரிகளும் காட்சிகளோடு ஒன்றிணைந்து பயணித்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.
தீபச்செல்வனின் வசனம் மற்றும் பாடல் வரிகள் அனைத்தும் ஈழ மக்களின் வலிகளை மிக நேர்த்தியாக வெளிக்காட்டியிருக்கிறது. சாதாரணமாக கடந்து போகும் சிறு வசனங்கள் கூட அவர்களை சுற்றி நடக்கும் அரசியலை அழுத்தமாக பதிவு செய்கிறது.
ஈழத் தமிழர்களை பற்றிய படம் என்றாலே டாக்குமெண்டரி பாணியில் இருக்கும் என்பதை முற்றிலும் மற்றிக்காட்டி முழுக்க முழுக்க ஒரு பரபரப்பான கமர்ஷியல் திரைப்படத்தை பார்த்த அனுபவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித் ஜோசப்.
நாயகன் அரவிந்தன் தனது குடும்பத்தை தேடி அலையும் போது, அவர்கள் கிடைப்பார்களா இல்லையா, என்ற எதிர்ப்பார்ப்போடு நம்மை படம் பார்க்க வைக்கும் இயக்குநர், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையில் ஈடுபட நினைத்தாலும், போராளி என்றால் அவரை சுற்றி நடக்கும் பதட்டமான சம்பவங்களை காட்டி பதற வைப்பவர், சிறையில் இருந்து விடுதலையாகும் போராளிகளுக்கு நிகழும் சோகமான முடிவுகள் மூலம் பெரும் அதிர்ச்சியை கொடுக்கிறார்.
நடிகர்கள் தேர்வு மற்றும் அவர்களின் நடிப்பு, தொழில்நுட்ப ரீதியாக படத்தை கையாண்ட விதம், சினிமா மொழி மூலம் ஈழத் தமிழர்களின் தற்போதைய வலிகளையும், எதிர்ப்பார்ப்புகளையும் பதிவு செய்த முறை, என அனைத்தையும் அளவாக கையாண்டிருக்கும் இயக்குநர் ரஞ்சித் ஜோசப், தமிழர்களின் சினம் எத்தகைய நியாயமானது என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருப்பதோடு, திரைப்படமாகவும் ரசிக்க வைத்திருக்கிறார்.
மொத்தத்தில், ’சினம் கொள்’ உலக மக்களை சிந்திக்க வைப்பதோடு, சினிமா ரசிகர்களை ரசிக்கவும் வைக்கும்.
ரேட்டிங் 4/5
நன்றி – சினிமா பொக்ஸ்
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]